18ஆவது மக்களவையின் முதல் அமர்வு நேற்று தொடங்கியது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக அமைந்ததை தொடர்ந்து புதிய எம்பிக்கள் நேற்றிலிருந்து பதவியேற்று வருகின்றனர்.


நாடாளுமன்றத்தில் எதிரொலித்த உதயநிதி பெயர்:


ஆந்திரா, பிகார் மாநில எம்.பி.க்கள் நேற்று பதவியேற்ற நிலையில், தமிழ்நாட்டு எம்.பி.க்கள் இன்று பதவியேற்று கொண்டனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பெயரை குறிப்பிட்டு திமுக எம்பிக்கள் தமிழில் பதவியேற்றனர்.


அதேபோல, தமிழ்மாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 9 காங்கிரஸ் எம்.பி.க்களில் 8 பேர் தமிழில் பதவியேற்று கொண்டனர். பெரும்பாலான காங்கிரஸ் எம்பிக்கள், அரசியல் சாசனம் வாழ்க, ஜெய்ஹிந்த் என குறிப்பிட்டு பதவியேற்றனர்.


தெலுங்கில் பதவியேற்பு:


இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டபோதிலும் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் தெலுங்கில் பதவியேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. கே. கோபிநாத், தனது தாய் மொழியான தெலுங்கில் பதவியேற்று கொண்டார்.


 






ஜெய் தமிழ்நாடு:


இறுதியாக, நன்றி, வணக்கம் என குறிப்பிட்ட அவர் 'ஜெய் தமிழ்நாடு' என கோஷம் எழுப்பினார். பதவியேற்ற திமுக எம்பிக்களில் மூவர் மட்டும் எந்த முழக்கமும் எழுப்பவில்லை. முன்னாள் மத்திய அமைச்சரும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான டி. ஆர். பாலு, முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினருமான ஆ. ராசா, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் எந்த முழுக்கமும் எழுப்பவில்லை.


அதேபோல, ஒரே ஒரு திமுக எம்பி மட்டும் கனிமொழி வாழ்க என்று முழக்கமிட்டார். தென்காசி எம்.பி. டாக்டர் ராணி ஶ்ரீகுமார் கனிமொழி பெயரை குறிப்பிட்டு பதவியேற்றார். எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வாழ்க என முழக்கமிட்டார் ராணிஶ்ரீகுமார்.


தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. 22 தொகுதிகளை திமுகவும் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சியும் கைப்பற்றியது. அதேபோல, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.