தமிழ்நாடு அரசு இந்த மழை பாதிப்புகள் குறித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் பாதிப்புகளை குறைத்திருக்கலாம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தருமபுரியில் செய்தியாளர்களுக்கு ஜி.கே.வாசன் பேட்டியளித்தாவது:
பாராளுமன்றத்தில் முக்கியமான மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது. அதே போல், தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால், சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தை முடக்கியது. எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கானது என்பதில் மாற்று கருத்து இல்லை. தென் மாவட்டங்களில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டு மக்கள், அதில் மூழ்கியுள்ள நிலையில் அவர்களுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் குரல் கொடுக்கவே அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளார்கள். மாறாக நாடாளுமன்றத்தை முடக்கி வெளியில் சென்று, மாநிலங்களவை தலைவரை அவமரியாதை செய்கின்ற வகையில் செயல்பட்டது சிறுபிள்ளைத்தனமானது.
நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்ற பொழுது, எதிர்க்கட்சியை சார்ந்த உறுப்பினர்கள், அந்த மசோதாக்கள் மீது விவாதம் செய்ய வேண்டும் என்ற பொறுப்பும், கடமையும் எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. ஆனால் அதை அவர்கள் செய்யாமல், தேர்தல், வாக்கு என்ற நோக்கத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்தை முடக்கி இருப்பது வேதனைக்குரிய செயல். ஒவ்வொரு மசோதாக்களும் மிகவும் முக்கியமானவை அதில் எதிர்க்கட்சிகளின் பங்கு இல்லை. இதை தான் மக்கள், வாக்களித்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் அதை செய்யவில்லை என்பது தான் உண்மை நிலை.
தென் மாவட்டங்களில் ஏற்பட்டு இருக்கின்ற இந்த பாதிப்பால் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தமிழ்நாடு அரசு இந்த மழை பாதிப்புகள் குறித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் பாதிப்புகளை குறைத்திருக்கலாம். மாறாக தமிழ்நாடு அரசு வானிலை மையம் சரியாக கணிக்கவில்லை என்று சொல்வது பொறுப்பற்ற தனமாக உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, புயல் வெள்ளம் போன்ற பாதிப்புகளில் அரசின் செயல்பாடு இல்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் முதல், மழை நிவாரணம் முறையாக வழங்க தொடங்கியதாக கூறி, மக்களை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்திருக்கின்றார்கள். ஏறத்தாழ 5.50 லட்சம் மக்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள் அவர்களின் நிலை என்ன என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதியளித்திருக்கிறது. கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மை இல்லாமல், அனைத்து மாநிலங்களுக்கும் மாவட்டத்தின் மக்கள் பாதிப்பிற்குள்ளாகின்ற பொழுது அவர்களை பாதுகாக்கின்ற உயர்ந்த நிலையில் மத்திய அரசு இருந்து வருகிறது. அந்த அடிப்படையிலேயே அமைச்சர் இதை கூறி இருக்கிறார். நிச்சயமாக தமிழகத்திற்கு தேவையான நிதியை படிப்படியாக, அமைச்சர் வழங்குவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும் நிவாரண உதவிகள் வழங்குவதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிப்படத் தன்மை இல்லை. பல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகள், முறையாக செய்யப்படவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு தான் சென்னையில் மழைக் காலத்தின் போது நான்கு நாட்கள் தண்ணீர் தேங்கியது.
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்டு இருக்கின்ற மின் கட்டணத்தை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் வருகிற 27, 28 ஆகிய இரண்டு நாட்களில் திருப்பூர், கோயம்புத்தூரில் நடைபெறுகின்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.