உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் நேற்று வெளியாகி, கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் விஐபி.,களுக்கான சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராமிற்கு அழைப்புவிடுக்கப்பட்டு, அவரும் படம் பார்த்தார். பின்னர் படம் பார்த்த விஐபி.,கள் அனைவரும் செய்தியாளர்கள் முன் தங்கள் கருத்தை பகிர்ந்தனர். அந்த வரிசையில் காயத்ரி ரகுராம் தனது கருத்தை தெரிவித்தார். இதோ அவரது கருத்து...




‛‛நெஞ்சுக்கு நீதி அருமையான படம். இந்தியில் 4 ஆண்டுகளுக்கு முன் வந்த படம் . ஏற்கனவே இந்தியில் பார்த்து ரொம்ப ரசித்த படம் . அதை தமிழில் பார்க்கும் போது, இன்னும் ஆழமாக பதியுது. அனைவரும் சமம் என்பது மிக முக்கியமான ஒன்று. உதயநிதி இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். நாங்கள் கட்சி வேறு வேறு என்றாலும், இந்த படத்தை நான் ரொம்ப ரசித்தேன். ஜாதியில்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். அதிலும், இந்துக்களிடம் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதை ஆழமாக காட்டியுள்ளனர்,’’ என்று கூறி புறப்படத் தயாரானார். அப்போது  செய்தியாளர்கள், குறுக்கு கேள்வி கேட்க முற்பட்டனர். 


அப்போது, அவர்களை இடைமறித்த காயத்ரி ரகுராம், ‛மற்றவர்களிடம் கேள்வி கேட்டீர்களா... என்னிடம் மட்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்’ என்று கூறினார். அப்போது ஒரு கேள்வியை கேட்டு, அவரை மீண்டும் பதிலளிக்கும் பகுதிக்கு அழைத்து வந்தனர். ‛எதிர்கருத்து கொண்ட நீங்கள், எப்படி இந்த படத்தை பார்க்க வந்தீர்கள்?’’ என்று அப்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த காயத்ரி, 


‛‛பாஜக ஆட்சியில் தான் இந்த திரைப்படம் இந்தியிலும் வந்தது. அதே படம் தான், இப்போது தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். அனைவரும் ஒன்று என்பது தான் மோடியின் கொள்கை. தேசம் முழுக்க தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று சட்டம் என்று கூறியிருக்கிறார்கள். அனைவரும் அதை தெரிந்து கொள்ள வேண்டும்,’’ என்றார்.




இந்த படத்தில் எது முக்கியமான சீன் என நினைக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த காயத்ரி,


‛‛எல்லா காட்சிகளும் நன்றாக இருந்தது. ஒவ்வொரு வசனமும் அற்புதமாக இருந்தது. கொஞ்சம் ஹார்சா இருந்தாலும், அந்த அளவிற்கு உண்மையில் பேசுவார்களா என்று தெரியாது. நகரங்களில் இது மாதிரி யாரும் பேசுவதில்லை. திருவாரூர் இது போன்ற பிரச்சனைகள் இருப்பதாக, சமீபத்தில் தான் அண்ணாமலை சார் கூறியிருந்தார்.’’ என்று பதிலளித்தார்.


அம்பேத்கரை ஜாதி கட்சித் தலைவராக சிலர் மாற்றியுள்ளதாக படத்தில் கூறியுள்ளார்களே என்ற கேள்வி எழுப்பிய போது, 


‛‛உண்மை தான், நாங்கள் தான் அம்பேத்கரை கொண்டாடுவோம் என்று ஒரு தரப்பினர் உரிமை கொண்டாடுகின்றனர். அனைவரும் அம்பேத்கரை கொண்டாட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்’’ என்றார். 


‛இந்த படத்தில் நடித்ததன் மூலம் உதயநிதியை ஒரு லீடராக எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய போது, ‛


‛‛அவர் நடிகராக நடித்திருக்கிறார். படத்தில் ஹீரோவையும், லீடராகவும் பார்க்க கூடாது. படத்தை நிஜத்தில் சேர்க்க கூடாது. ஹீரோவாக உதயநிதி நன்றாக நடித்திருக்கிறார், அவ்வளவு தான்’’ என்று காயத்ரி ரகுராம் பதிலளித்தார். 


இதோ அந்த பேட்டியை வீடியோவாக காண...