பெண்களை தரக்குறைவாக பேசியதாக தி.மு.க. நிர்வாகிக்கு எதிராக, பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையில் அண்மையில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பெண்களுக்கு ஏதேனும் அவமரியாதை நடந்தால் பா.ஜ.க. குரல் கொடுக்கும் எனவும் அண்ணாமலை சூளுரைத்து இருந்தார்.


ஆனால், பா.ஜ.க.வில் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் என்பது தொடர்கதையாக மாறியுள்ளது. கே.டி. ராகவன்  வீடியோ தொடங்கி திருச்சி சூர்யா- டெய்சி ஆடியோ வரை வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து,  திருச்சி சூர்யா தன்னிடம் தவறாக பேசிய வீடியோக்கள் இருப்பதாக அலிஷா அப்துல்லா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார்.


ஓரங்கட்டப்பட்ட காயத்ரி ரகுராம்:


இதனிடையே, அண்ணாமலை பா.ஜ.க. தமிழக தலைமை பொறுப்பை ஏற்றது முதலே, மூத்த நிர்வாகியான காயத்ரி ரகுராம் கட்சியில் ஓரங்கப்பட்டு வருவதாக பல்வேறு தகவல் வெளியாகின. அவர் வகித்து வந்த பாஜகவின் கலைப்பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, 6 மாதங்கள் எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்தார். அதைதொடர்ந்து, அயலக தமிழர் மற்றும் பிறமாநில தமிழர் நலப்பிரிவின் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.


அண்ணாமலை - காயத்ரி ரகுராம் மோதல்:


இந்நிலையில்,  காசியில் நடந்த காசி தமிழ் சங்கம் விழாவிற்கு, பா.ஜ.க. தமிழக தலைவர்கள் பலர் சென்ற நிலையில் காயத்ரி ரகுராமிற்கு மட்டும் அனுமதி கிடைக்கவில்லை. இதுகுறித்து காயத்ரி இணையத்தில் வருத்தம் தெரிவித்த நிலையில்தான், அதற்கு அண்ணாமலை ஆதரவு நிர்வாகிகள் காட்டமாக பதில் அளிக்க தொடங்கினர். இதையடுத்து அண்ணாமலை மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த காயத்ரி ரகுராம், கட்சி உள் விவகாரங்களை வெளிப்படையாக ட்விட் செய்து விமர்சனம் வைத்தார். இதன் விளைவாக, கட்சிக்கு எதிராக காயத்ரி ரகுராம் செயல்படுவதாக கூறி கட்சியில் இருந்து 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்து அண்ணாமலை உத்தரவிட்டார். இதையடுத்து இருதரப்புக்கும் இடையேயான கருத்து மோதல் மோசமடைந்து, கடுமையான மற்றும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.






”அண்ணாமலையின் வார் ரூம் தாக்குதல்”


இந்நிலையில், அண்ணாமலை தரப்பு மீது காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், "அண்ணாமலையின் தலைமைக்கு கீழ் எங்களுக்கு எதிராக கடுமையான, அருவெறுப்பான, மோசமான தனிமனித தாக்குதல் நடத்தப்படுகிறது. வார் ரூம் மூலம் இந்த தாக்குதல்கள் நடக்கிறது. தமிழ்நாடு போலீஸ் இதை பற்றி விசாரிக்க வேண்டும். இவர்கள் பெண்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் வைக்கிறார்கள்" என காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார்.


இந்த பதிவில் தமிழக போலீசாரையும் டேக் செய்துள்ளார். அதோடு, தர்மத்தை பின்பற்றுபவர்கள் யாரும் அண்ணாமலை உடன் இல்லை. அவர் கூட தர்மத்தை கடைபிடிப்பவர் அல்ல. சபரிமலை மாலை அணிந்து கொண்டு கூட என்னை பற்றி தவறாக பேசினார். வதந்திகளையும், கிசுகிசுக்களையும் உருவாக்கி, பழிவாங்கும் வார்த்தைகளால் எனக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என அண்ணாமலை முயற்சிக்கிறார் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். அண்ணாமலை மீதான இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு, தமிழக பாஜகவில் மீண்டுல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.