Mahatma Gandhi: காந்தி தேச தந்தை இல்லை? ஏன் தெரியுமா? : காந்தி - சுபாஷ் தலைவர்களுக்கு இடையே என்ன பிரச்சினை?

Gandhi Birthday Oct 2: ஒத்துழைக்க மாட்டேன் என தெரிவித்த காந்தி, அதற்கு சுபாஷ் ” அன்புக்குரிய பாபு  “ நீங்கள் பின்பற்றும் அகிம்சை முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை என தெரிவிக்கிறார்.

Continues below advertisement

Gandhi Jayanti 2024: மகாத்மா என மக்களால் அன்போடு அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி பிறந்தார். ஆம்.! இன்றுதான் அவரின் பிறந்தநாள். அகிம்சை வழியில் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய காந்தி, தேச தந்தை இல்லையா? இதுகுறித்து சற்று விரிவாக பார்ப்போம்.

Continues below advertisement

காந்தியின் அகிம்சை போராட்டம்:
 

இந்திய மக்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சி இருந்த காலத்தில், பொருளாதார சுரண்டல்களையும், பல இன்னல்களையும் , அடிப்படை சுதந்திரம் கிடைக்காலும்கூட அவதியுற்றனர். இதனால் , ஆங்கிலேயர்களை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என இந்தியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதில் போராட்ட தலைவர்களில் மிக முக்கியமான ஒருவராக காந்தியும் இருந்தார். 
காந்தியின் போராட்டமானது அகிம்சை வழியான  சத்தியாகிரக போராட்டத்தின் வடிவமாகவே இருந்தது. 

காந்தி - சுபாஷ்:

அப்போது இந்தியர்களுக்கு என இருந்த முக்கிய அமைப்பாக இந்திய தேசிய காங்கிரஸ் இருந்தது. 1938 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ஹரிப்பூரா  மாநாட்டில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரசுக்கான தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் சுபாஷ் சந்திர போஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுபாஷ் , காந்தியின் அகிம்சை கொள்கைக்கு முற்றிலுமாக எதிராகவுள்ள ஆயுத போராட்டக்காரர். ஆயுத வழியில் போராட்டத்துக்கான முன்னெடுப்பை மேற்கொள்ள ஆரம்பித்தார். 


1939 ஆம் ஆண்டு மீண்டும் தேர்தல் வருகிறது, இந்த முறையும் சுபாஷ் வெற்றி பெறுகிறார், எதிர்த்து போட்டியிட்ட பட்டாபி சீதாராமையா தோல்வி அடைந்து விடுகிறார். ஆனால், காந்தி சுபாஷுக்கு எழுதிய கடிதத்தில், வாழ்த்துகள் சுபாஷ், இளைஞர் வருவது மகிழ்ச்சி, அகிம்சை வழி சிறந்தது , அதனால் நான் ஒத்துழைக்க மாட்டேன், ஆயுத வழி போராட்டம் வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

அதற்கு சுபாஷ் , அன்போடு பாபு  “ நீங்கள் பின்பற்றும் அகிம்சை முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை என தெரிவிக்கிறார். பின்னர் சுபாஷ் காங்கிரஸ் தலைவர் பதவியை  ராஜினாமா செய்துவிடுகிறார். 

தேச தந்தை:

இதையடுத்து, சுபாஷ் சிங்கப்பூர் சென்று இந்திய தேசிய ராணுவத்தை ஜப்பான் உதவியுடன் உருவாக்கி, ஆங்கிலேயர்களை தாக்குவதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதே தருணத்தில் 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தி நடத்தி வருகிறார்.


 

ஆங்கிலேயர்கள்  மீது கடும் கோபம் கொண்டிருந்த காந்தி,  செய் அல்லது செத்துமடி என்ற பிரயோகத்தை பயன்படுத்துகிறார். இதனால் போராட்டம் தீவிரமாகும் என எண்ணிய ஆங்கிலேயர்கள் காந்தி, நேரு உள்ளிட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்போது,  1944 ஆம் ஆண்டு புனே ஆகாகான் பேலசில் காந்தி அடைக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி கஸ்தூரிபாய் காந்தி காலமானார். இதையறிந்து, சுபாஷ், சிங்கப்பூரிலிருந்து வானொலி வாயிலாக அன்புள்ள தேச தந்தையே ( டியர் ஃபாதர் ஆஃப் நேசன் ) உங்களது ஆசீர்வாதம் எனக்கு தேவை. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தால் நல்லது நடந்தால் மகிழ்ச்சி, ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என அன்போடு தெரிவித்தார்.

இப்போதுதான், சுபாஷ் சந்திர போசால், முதன்முதலாக , தேச தந்தை என காந்தி என அழைக்கப்பட்டதாக வரலாற்று தகவல் தெரிவிக்கின்றன
 
இருவருக்கிடையே எதிர் கருத்து இருந்தாலும், அன்பு மற்றும் மரியாதையை ஒருவர் மீது மற்றொருவர் கொண்டிருந்தனர். சுபாசிடம் இருக்கும் தேசபக்தியை போல யாரிடமும் பார்த்தது இல்லை என்றும் காந்தி ஒருமுறை கூறியிருந்தார். 

காந்தியின் மறைவை அறிவித்த நேரு:


1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திரம் கிடைத்து விடுகிறது. 1948 ஜனவரி 30 ஆம் தேதி சுமார் மாலை 5 மணியளவில் டெல்லியில் உள்ள பிர்லா அரங்கத்தில் இருந்த காந்தியை நாதுராம் கோட்சே சுட்டு கொன்றுவிடுகிறார்.
 
அப்போது, பிரதமராக இருந்த நேரு, அகில இந்திய வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தினார். “ நமது தேச தந்தை நம்முடன் இல்லை” என தெரிவித்தார். 2வது முறையாக தேசத்தந்தை என்ற வார்த்தையை பொதுவெளியில் நேருவால் பயன்படுத்தப்பட்டது.  இதையடுத்து, இன்று வரை தேச தந்தையாக அன்போடு அழைக்கப்படுகிறார்.

தேச தந்தை ஏன் இல்லை?


இப்பொழுது , உங்களுக்கு சந்தேகம் வரலாம், தேசதந்தை இல்லை என ஏன் தலைப்பு என்று?


கடந்த 2004 ஆம் ஆண்டு, டெல்லி முதலமைச்சராக இருந்த சீலா தீக்சித், அம்பேத்கருக்கு இந்திய அரசியலமைப்பின் தந்தை என பட்டம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு , மத்திய அரசு தரப்பில்  இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து 18ன்படி அரசு பட்டம் கொடுக்க கூடாது என்றும், காந்திக்கு தேசதந்தை பட்டம் என்பதுகூட  , அதிகாரப்பூர்வமாக இல்லை என்றும் தெரிவித்தது. கல்வித்துறை மற்றும் இராணுவத்திலும் சாதனை புரிவோருக்கு மட்டுமே , அதிகாரப்பூர்வமாக பட்டம் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து 2011 ஆம் ஆண்டு உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோவைச் சேர்ந்த 6வது வகுப்பு பள்ளி மாணவி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதில் ” காந்திக்கு எப்போது தேசத்தந்தை என்ற பட்டம் வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய அரசு தரப்பில் இதற்கு முன்பு தெரிவித்ததை போன்றே “ இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து 18ன்படி அரசு பட்டம் கொடுக்க கூடாது என்றும், அதிகாரப்பூர்வமாக தேச தந்தை என்ற பட்டம், அரசு சார்பில் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது.

கட்டமைப்புக்கள் வராதவர் காந்தி:


இந்திய சுதந்திர போராட்டங்களை, சத்தியாகிரக போராட்டங்கள், நடைபயணங்கள் மூலம் நாட்டு மக்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றியவர் காந்தி.

இந்தியா பல மொழிகள் , பல சாதிகள் , பல மதங்கள் என பல்வேறு கட்டமைப்புகள் இருக்கின்றன. இதனால், சில தலைவர்களை , இந்த சாதிக்குட்பட்டவர் என்றும், இந்த மதத்திற்கு உட்பட்டவர் என்றும், இந்த மொழிக்கு உட்பட்டவர் என்றும் , இந்த நிலப்பகுதிக்கு உட்பட்டவர் என்றும் சில அடக்கிவிடுவார்கள்.

ஆனால் சாதி, மதம் , மொழி, நிலப்பரப்பு என பல்வேறு கட்டமைப்புகளுக்குள் அடங்காதவராக அனைவருக்கும் நெருக்கமானவராகவே காந்தி பார்க்கப்படுகிறார். அதனாலேயே, மகாத்மா காந்திக்கு அதிகாரப்பூர்வமாக தேச தந்தை என்ற பட்டம் கொடுக்கப்படவில்லை என்றாலும், மக்களின் அன்பின் உணர்வுகளால் தேசதந்தையாகவே பார்க்கப்படுகிறார் என்றால் மறுப்பதற்கில்லை என்றே சொல்லலாம்.

Continues below advertisement