தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் பழமையான ஆலயங்கள் உள்ளன. அங்குள்ள பெரும்பாலான கோவில்களில் யானைகள் அணிவகுப்பு என்பது அந்தந்த கோவில்களின் விழாக்களில் வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த வரிசையில், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆணயாடி கிராமத்தில் அமைந்துள்ளது பழயிடோம் நரசிம்ம சுவாமி திருக்கோவில்.
இந்த கோவில் மிகவும் பழமையான திருக்கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின் ஒரு பாகமாக யானைகள் பங்கேற்கும் கஜமேளா விழா நடத்தப்படும். வெகுவிமர்சியாக நடைபெறும் இந்த கஜமேளாவை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலின் முன்பு வழக்கம்.
இந்த நிலையில், நடப்பாண்டிற்கான கஜமேளா நடைபெறும் தேதி? யார்? யார் பெயரில் நடத்தப்படுகிறது? என்ற விவரத்தை சமீபத்தில் கோவில் நிர்வாகம் வெளியிட்டது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசியல் வெற்றிப்பயணத்திற்காகவும் கஜமேளா நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
வரும் ஜனவரி 31-ந் தேதி நடைபெற உள்ள இந்த கஜமேளா அணிவகுப்பில் 6-வது வரிசையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் அணிவகுப்பு நடைபெற உள்ளது. தொடக்கத்தில் கோவில் நிர்வாகத்தினருக்கு அழைப்பு விடுத்து இதுதொடர்பாக யாரோ தகவல்கள் கேட்டபோது கோவில் நிர்வாகத்தினர் இதை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. பின்னர், சில நாட்கள் கழித்து கோவிலுக்கு நேரில் வந்த 2 பேர், கஜமேளா அணிவகுப்பிற்கான கட்டணமான ரூபாய் 9 ஆயிரத்தை கோவில் நிர்வாகத்திடம் செலுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரிலான அணிவகுப்பை உறுதி செய்தனர்.
அந்த கோவிலில் நடப்பாண்டிற்கான திருவிழாவில் 459 அணிவகுப்புகள் பக்தர்கள் சார்பில் நடைபெற உள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காகவும், தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அனைத்து வளங்களும், நலங்களும் பெற வேண்டும் என்பதற்காக சென்னையைச் சேர்ந்த ஜெயன் என்பவரும், திருநெல்வேலியில் உள்ள அவரது சகோதரி ரதிபசுபதியும் இந்த அணிவகுப்பை ஏற்பாடு செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இந்த அணிவகுப்பில் 80 யானைகள் வரை பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்