கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் சங்கரய்யா சிலை திறப்பு விழா நெல்லை தியாகராஜநகர் சிஐடியு மின் ஊழியர் அரங்கில் வைத்து நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு தோழர் சங்கரய்யா சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தோழர் சங்கரய்யா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் கூறும் பொழுது, தமிழகத்தில் இந்தியா கூட்டணியுடன் தேர்தல் தொகுதி உடன்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.


பொய்யான கருத்துக்கணிப்பை வெளியிட்டு பாரதிய ஜனதா கட்சி 400 தொகுதியில்  வெற்றி பெறும் என சொல்லி வருகின்றனர். 10 ஆண்டுகளில் சொன்ன வாக்குறுதி எதனையும் பாஜக நிறைவேற்றவில்லை. இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் சரிவடைந்துள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் சமையல் எரிவாயு விலை பெட்ரோல், டீசல் விலை ஆகியவை குறைத்து பாஜகவினர் மக்களை ஏமாற்றுகின்றனர். மோடி பிரச்சார மேடைகளில் ஊழலை ஒழிப்போம் என பேசி வருகிறார். இந்திய வரலாற்றிலேயே சட்டபூர்வமான ஊழல் எங்கும் நடக்காத அளவில் தேர்தல் பத்திர விவகாரத்தில் நடந்துள்ளது. பாஜக அரசால் தேர்தல் பத்திர முறை ரிசர்வ் வங்கி சட்டம் உள்ளிட்ட ஐந்து சட்ட ங்களை திருத்தி நிதியமைச்சர் அருண்ஜெட்லியால் கொண்டுவரப்பட்டது. சட்டவிரோதமான முறை என நீதிமன்றம் சொல்லி முழு விவரங்களையும் கொடுக்க அறிவுறுத்திய நிலையிலும் எஸ்பிஐ வங்கி தொடர்ந்து கால அவகாசம் பெற்று வருகிறது, நாட்டின் மிக மோசமான ஊழல் கட்சியாக பாஜக உள்ளது. அமலாக்க துறையை அனுப்பி சோதனை நடத்தி பல்வேறு கம்பெனிகள் மூலம் தேர்தல் பத்திரமாக கட்சிக்கு நிதியை வரவழைத்துள்ளனர். நாடு முழுவதும் பாஜகவை தோல்வியடையச் செய்ய வேண்டும். தேர்தல் பத்திர முறைகேடு விவகாரத்தை திசை திருப்பவே 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமல்படுத்தியுள்ளனர். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் தொடர்ந்து பிரச்சினை செய்து வருகின்றனர். ஆளுநர்களை வைத்து போட்டி அரசியலையும் நடத்தி வருகின்றனர். பொன்முடிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஆளுநருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை கொடுத்த நிலையிலும், தமிழக ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்தது கண்டனத்திற்குரியது. பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்களது நிலைப்பாடு மிக மோசமானது. பாஜக - பாமக கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி கிடையாது. பாஜக கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் பாமகவும் - அதிமுகவும் ஆதரித்த காரணத்தால் தற்போது இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


பாஜக தலைமையிலான அணி மட்டுமல்ல அதிமுக தலைமையிலான கூட்டணியும் தோற்கடிக்கப்பட வேண்டும். பாஜக தலைமை எழுதிக் கொடுத்த தீர்மானத்தையே தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையாக வெளியிட்டுள்ளது. தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களும் தெரிந்தே பிரதமர் தென் மாநிலங்களில் பிரச்சாரத்தை முடித்துள்ளார். அயோத்தி அறக்கட்டளையில் இருந்து நபர்களை தேர்தல் அதிகாரிகளாக நியமித்துள்ளதை பார்த்தால் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் பாஜக தலைமை அலுவலகத்தில் எடுக்கப்படுவதாக தோன்றுகிறது. அரசியல்வாதிகளை ஆளுநர் ஆக்ககூடாது என்பது விதி. அதனை பாஜக ஆர்எஸ்எஸ் மீறி அரசியல்வாதிகளை தொடர்ந்து ஆளுநராக நியமித்து வருகிறது. ஏற்கனவே தமிழிசை சௌந்தர்ராஜன் தேர்தலில் நின்று தோல்வி அடைந்தார். மீண்டும் தேர்தலில் தோல்வியடைய போகிறார் என அவர் தெரிவித்தார்