மக்களவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 54 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவு பெறுகிறது. 


கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 13வது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார். இதன்மூலம் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்திக்குப் பின்  அதிக நாட்கள் பதவி வகித்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் இவர் தான் இந்தியாவின் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த முதல் பிரதமராவார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற மன்மோகன் சிங் 1966 முதல் 1969 ஆம் ஆண்டு வரை ஐநாவில் பணியாற்றினார்.


பின்னர் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் லலித் நாராயண் மிஸ்ரா அவரை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் ஆலோசகராக நியமித்தார். மத்திய அரசில் தலைமை பொருளாதாரா ஆலோசகர், ரிசர்வ் வங்கி ஆளுநர், திட்டக்குழு தலைவர் என பல முக்கிய பதவிகளை வகித்த மன்மோகன் சிங் 1991 ஆம் ஆண்டி பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவியேற்றார். அப்போது இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. 


பொருளாதார துறையில் சிறந்து விளங்கிய மன்மோகன் சிங் துணிச்சலான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு சீர்திருந்தங்களை உண்டாக்கினார். மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலக்கட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. அதேசமயம் ஒருபோதும் மக்களவை தேர்தலில் போட்டியிடாத மன்மோகன் சிங் 33 ஆண்டுகால அரசியல் பயணத்திலும் மாநிலங்களவை உறுப்பினராகவே இருந்துள்ளார். 


1991 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அஸ்ஸாம் மாநிலத்திலும், 2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் மாநிலத்திலும் இருந்து எம்.பி.யாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பிரதமர் மோடி, மன்மோகன் சிங்கை புகழ்ந்து தள்ளினார். “சக்கர நாற்காலியில் வந்து வாக்கெடுப்பில் பங்கேற்ற அவர் உண்மையில் அனைவருக்கும் உத்வேகம் தரக்கூடியவர் என தெரிவித்தார். ஒரு தலைவராகவும், எதிர்க்கட்சி உறுப்பினராகவும் மன்மோகன் சிங்கின் பங்களிப்பு என்பது மிகச்சிறப்பானது. ஜனநாயகத்துக்கு அவர் செய்த பங்களிப்புக்காக நினைவுக்கூறப்படுவார்” என பிரதமர் மோடி பேசியிருந்தார். 


இந்நிலையில் 91 வயதாகும் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. ராஜஸ்தானில் இதனால் காலியாகும் இடத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அலங்கரிக்க உள்ளார். அவர் முதல்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக செல்லவுள்ளார். மேலும் நேற்று 49 எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில்,இன்று 5 பேர் ஓய்வு பெற உள்ளார்கள்.