அரசியலில் ஏறுமுகம் எப்போது கிடைக்கும்? இறங்கு முகத்தையும் ஏற்றால் மட்டுமே கிடைக்கும் என்பார்கள், அதை அனுபவித்தவர்கள். பி.ஏ., முடித்தவன் எம்.ஏ., செல்வான்... ஆர்ஐ தாசில்தாராக மாறுவார், எஸ்ஐ இன்ஸ்பெக்டராக மாறுவார், ஆனால், அரசியலில் மட்டும் தான், மந்திரி, தோற்றால் தொண்டனராகிறான். தொண்டன், ஜெயித்தால் மந்திரியாகிறான். சரி இதெல்லாம் வழக்கமானவை. நாம் விசயத்திற்கு வருவோம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தனித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2016 தேர்தலில் வெற்றி பெற்ற மாரியப்பன் கென்னடி, தற்போது தரம் உயர்த்தப்பட்ட மானாமதுரை நகராட்சியின் வார்டு ஒன்றில், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். ஆனால், இம்முறை அவர் இருப்பது திமுகவிற்கு. நேற்று வரை 18 வார்டுகளுடன் பேரூராட்சியாக இருந்த மானாமதுரை, இம்முறை தான் முதன் முறையாக நகராட்சியாக தேர்தலை சந்திக்கிறது.
18 வார்டுகள் 27 வார்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. கடைசி வார்டான 27 வது வார்டில் தான், மாரியப்பன் கெனடி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக வேட்பாளராக அவர் பெற்ற வாக்குகள், 89 ஆயிரத்து 893. அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக வேட்பாளர் சித்ராச்செல்வி பெற்ற வாக்குகள் 75 ஆயிரத்து 4 ஓட்டுகள். இந்த தேர்தலில் மாரியப்பன் கென்னடி பெற்ற வெற்றியின் வித்தியாசம் எவ்வளவு தெரியுமா? 14 ஆயிரத்து 889 ஓட்டுகள். எதற்கு இந்த பழைய கதை என்கிறீர்களா? விசயம் இருக்கிறது...
ஒரு தொகுதியில், அதாவது மானாமதுரை, திருப்புவனம் என இரு பேரூராட்சிகள், மானாமதுரை, திருப்புவனம் என இரு ஊராட்சி ஒன்றியங்கள், இன்னும் இளையான்குடியை சார்ந்த பகுதிகள் என மிகப்பெரிய நகர் பகுதிகளை உள்ளடக்கிய சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக தேர்வான மாரியப்பன் கென்னடி, இன்று கவுன்சிலர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ.,வாக தேர்வான அவர், ஓபிஎஸ் தர்மயுத்தத்தை தொடர்ந்து, சசிகலா பக்கம் இருந்தார். பின்னர் ஓபிஎஸ்-இபிஎஸ் இணைப்பு ஏற்பட்ட போது, டிடிவி தினகரன் பக்கம் தாவினார். டிடிவிக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ.,க்களில் மாரியப்பன் கென்னடியும் ஒருவர். அவர்கள் அனைவரின் பதவி பறிக்கப்பட்டு, மீண்டும் நடந்த இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளராக மானாமதுரை தொகுதியில் களமிறங்கிய மாரியப்பன் கென்னடி, படுதோல்வி அடைந்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பின் அமமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார். அமைச்சர் பெரிய கருப்பணின் நெருக்கமானவராக மாறியுள்ள அவருக்காகவே, மானாமதுரை நகராட்சியை ரிசர்வ் பொது வார்டாக மாற்றினார்கள் என்கிற பேச்சும் உள்ளது. இந்நிலையில் தான், 27 வது வார்டில் மாரியப்பன் கென்னடி திமுக சார்பில், போட்டியிடுகிறார். இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், அவர் போட்டியிடும் வார்டு வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் 650 ஓட்டுகள் மட்டுமே. 319 ஆண் வாக்காளர்கள், 331 பெண் வாக்காளர்கள். இதில் 326 வாக்கு பெற்றாலே வெற்றி பெற்றுவிடலாம்.
ஒரு பெரிய தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் எல்லாம் மேற்கொண்டு வெற்றி பெற்ற ஒரு எம்.எல்.ஏ., வேட்பாளர், வெறும் 650 ஓட்டுகளை கொண்ட இரு தெருக்களில், அசால்டாக ஓட்டு சேகரித்துக் கொண்டிருக்கிறார். இதில் ஜெயித்தால்(அவரோடு சேர்த்து, பெரும்பான்மைக்கு தேவையான திமுக கவுன்சிலர்கள்) அவருக்கு நகராட்சி தலைவர் வாய்ப்பு கிடைக்கலாம். ஒருவேளை பெரும்பான்மை இல்லாமல் அவர் ஜெயித்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் கவுன்சிலர் மட்டுமே!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்