சேலத்தில் அதிமுக கலை இலக்கியப் பிரிவின் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.


பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெற்று காகிதம்:


அப்போது அவர் கூறியது, "பா.ஜ.க. தேர்தல் அறிக்கை என்பது வெறும் காகிதம். அது எந்தவித பயனுமற்றது. பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க.விற்கு எந்த தொடர்பும் இல்லை, அ.தி.மு.க. தனித்து இயக்குகின்ற மகத்தான மக்கள் இயக்கம். அ.தி.மு.க.விற்கு ஏழு முறை ஆட்சி அதிகாரத்தை மக்கள் வழங்கினார்கள். தற்போது எதிர்க்கட்சியாக சிறப்பாக பணியாற்றி வருகிறது என்பதை மீண்டும் மீண்டும் முதலமைச்சருக்கு தெளிவுபடுத்துகிறோம். எங்களுக்கு எதற்கு கள்ள உறவு? கடந்த 2014, 2021 ஆகியவற்றில் நல்ல உறவாக பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடர்ந்த நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்று விலகி வந்துவிட்டதாக என்று கூறினார். 



வாக்குக்காக வரும் மோடி:


பா.ஜ.க. தேர்தல் அறிக்கை குறிப்பிட்டுள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதில் பல்வேறு சர்ச்சைகள் உள்ளது. அது குறித்து தேர்தலுக்குப் பிறகு முழுமையான கருத்தை தேர்தலுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் தெரிவிப்பார். பா.ஜ.க. பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை என்பது தான் பாஜக தேர்தல் அறிக்கை பார்க்க வேண்டும்.


தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்ட போதெல்லாம் வராத பிரதமர் மோடி தற்பொழுது வருகிறார் என்றால் வாக்கு அரசியலுக்கு தான் வருகிறார். வாக்கு அரசியலுக்கான தேர்தல் அறிக்கை என்பது தான் பாஜகவின் தேர்தல் அறிக்கை பார்க்க வேண்டும் என்றார். அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் மகத்தான வெற்றி சரித்திரம் படைக்கும். போகப் போக இன்னும் அதிக இடங்களை பிடிப்போம் என்றும் கூறினார்.


அண்ணாமலை அரைவேக்காடு:


ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. உண்மையான தலைவர் கையில் அதிமுக கிடைக்கும் என்று அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு, அண்ணாமலை அரசியலில் அரைவேக்காடு, அரசியலில் புதிய வரவு, அதிமுக அசைக்க முடியாத எஃக்கு கோட்டை. இந்த எஃக்கு கோட்டைக்குள் யாரும் ஊடுருவி ஓட்டை போடமுடியாது. அ.தி.மு.க. பற்றி விமர்சிப்பதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார். உன்னுடைய தவறுதான் பிறருடைய தவறாக தெரியும்.


பா.ஜ.க. தேர்தல் பத்திரத்தில் எவ்வளவு பெரிய ஊழல் செய்துள்ளது என்று நாட்டு மக்களுக்கு தெரியும். உச்சநீதிமன்றமும் இதை வெளிப்படுத்தியுள்ளது. அப்படி ஒரு நிலைப்பாட்டில் இருக்கும்போது அ.தி.மு.க. குறித்து குறை சொல்வது வெட்கக்கேடான ஒன்று.‌ அதிமுக கட்சி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் இயங்கும். இதெல்லாம் வெறும் கற்பனை. 2 கோடி தொண்டர்கள் இருக்கும் அதிமுக இயக்கத்திற்கு நான்கு ஆண்டு காலம் நல்லாட்சியை கொடுத்துள்ளார். தற்பொழுது எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு மகத்தான ஆதரவு இருப்பதை திரும்பத் திரும்ப தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.