வேட்பாளர் அறிமுகம்:


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுதாக்கலே தொடங்கிவிட்டது. இந்நிலையில், பல கட்ட ஆலோசனைக்குப் பிறகு  நீண்ட இழுபறிக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி தரப்பிலான அ.தி.மு.க. அணியின் வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பிலான தேர்தல் பணிமனை திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ராஜேந்திர பாலாஜி மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, இடைதேர்தலில் எடப்பாடி பழனிசாமி சார்பிலான அ.தி.மு.க. அணியின் வேட்பாளராக கே.எஸ். தென்னரசு அறிமுகம் செய்யப்பட்டார்.


தாமதம் ஏன்? - எஸ்.பி. வேலுமணி விளக்கம்


பின்பு நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி. வேலுமணி, “ போட்டியிட ஆளே இல்லாத காரணத்தால் தான் அதிமுகவில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என சில செய்திதாள்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், வாய்ப்பு கேட்டு அதிகமான போட்டி இருந்ததன் காரணத்தால் தான், வேட்பாளரை அறிவிக்க 2-3 நாட்கள் கூடுதல் தாமதாகியுள்ளது. வாய்ப்பு கேட்டு கடுமையான போட்டி இருந்தது, அதிமுகவில் எல்லாரும் போட்டியிட வாய்ப்பு கேட்கின்றனர். எல்லாரிடமும் கருத்து கேட்டு, கலந்து பேசி வெற்றி வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.  வெற்றி பெறுவது அ.தி.மு.க. தான் என்பது உறுதி ” என கூறினார்.


ஸ்டாலினை விமர்சித்த எஸ்.பி. வேலுமணி:


வேட்பாளர் தென்னரசு வெற்றி பெற அதிமுக தொண்டர்களும், தோழமை கட்சியினரும் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதோடு, ஸ்டாலின் எதையுமே செய்யாத ஒரு முதலமைச்சராக இருப்பதாகவும், எஸ்.பி. வேலுமணி கடுமையாக விமர்சித்தார்.


யார் இந்த தென்னரசு?


2001-ல் ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கிய கே.எஸ்.தென்னரசு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் என்.கே.கே.பெரியசாமியை 24,440 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். ஈரோடு கிழக்குத் தொகுதியாகப் பிரிக்கப்பட்ட பிறகு 2016 தேர்தலிலும் வெற்றி பெற்றவர் என்பதால், தொகுதி மக்களிடையே நன்கு பரிட்சயமானவர்.  ஒரு வேளை இரட்டை இலைச் சின்னம் இல்லாவிட்டாலும், ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஏற்கெனவே இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த கே.ஏ.தென்னரசுக்கு வாய்ப்பு கொடுப்பதன் மூலம்  கூடுதல் வாக்குகளைப் பெற முடியும் என்ற நோக்கில் ஈபிஎஸ் தரப்பு அவருக்கு வாய்ப்பளித்துள்ளது. தற்போது இவர், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர்  மன்றச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஈரோடு கிழக்கு நிலவரம் என்ன?


2011-ம் ஆண்டுக்கு முன்புவரை பிரிக்கப்படாத ஈரோடு தொகுதியாக இருந்த நிலையில், 2011-ம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு ஈரோடு கிழக்கு, மேற்கு என இரண்டு தொகுதியாகப் பிரிக்கப்பட்டன. அதைதொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை நடைபெற்ற மூன்று தேர்தலில் அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இரண்டு முறையும், தி.மு.க கூட்டணி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் தான் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இரண்டு முறை அதிமுக எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற தென்னரசு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் ஈபிஎஸ் சார்பிலான அதிமுக அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.