அதிமுகவில் மோதல்- செங்கோட்டையன் நீக்கம்
தமிழக தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுகவின் மூத்த நிர்வாகியாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தவெகவில் இன்று இணைந்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக பல பிளவுகளாக பிரிந்துள்ளது.
ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். எனவே பிரிந்து சென்ற தலைவர்கள் ஒருங்கிணைந்தால் தான் தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியும் என தொடர்ந்து செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார்.
தவெகவில் இணைந்த செங்கோட்டையன்
இதற்காக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் சந்தித்து பேசியிருந்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை தூக்கியடித்தார். இதனையடுத்து பாஜக அல்லது திமுகவில் செங்கோட்டையன் இணைவார் என தகவல் வெளியானது.
திமுகவும் செங்கோட்டையனிடம் பேச்சுவார்த்தையை நடத்தியது. ஆனால் நடிகர் விஜய் கட்சியில் இணைவது மட்டும் தான் தனக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் நல்ல வாய்ப்பு என திட்டமிட்ட செங்கோட்டையன், இன்று காலை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர். இதனையடுத்து தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் 4 மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச் செயலாளர் பதவியும் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.