தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது அரசியல் கட்சிகள், ஒரு கட்சியில் இருந்து நிர்வாகிகளை இழுக்கும் பணியும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்த கட்டமாக பாஜகவா.? திமுகவா.? எந்த கட்சியில் செங்கோட்டையன் இணைவார் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய்யின் தவெகவில் இணைய இருப்பது அரசியல் வட்டாரத்தையே திரும்பி பார்க்கவைத்துள்ளது.
செங்கோட்டையனை தட்டி தூக்கிய விஜய்
நேற்று காலை தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், மாலை தவெக தலைவர் விஜய்யை சந்தித்து கட்சியில் இணைவது குறித்தும், தவெகவில் தனக்கு வழங்கப்படவுள்ள பதவி தொடர்பாகவும் ஆலோசித்தார். இதனையடுத்து இன்று காலை பனையூரில் நடைபெறும் விழாவில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக்கொள்ளவுள்ளார் செங்கோட்டையன். அப்போது மூத்த நிர்வாகியான செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதே போல ஈரோடு கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த செங்கோட்டையனின் ஆதரவு நிர்வாகிகளும் தவெகவில் இணையவுள்ளனர்.
தவெகவில் இன்று இணையும் செங்கோட்டையன்
இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தில் இருந்து முன்னாள் எம்பி சத்தியபாமா மற்றும் அதிமுக மாஜி நிர்வாகிகளும் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வந்துள்ளனர். இது மட்டுமில்லாமல் புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவராக அதிக ஆண்டுகள் இருந்தவர் சாமிநாதனும் தவெகவில் இன்று இணையவுள்ளார். புதுச்சேரியில் நியமன எம்எல்ஏவாகவும் இருந்து வந்த சாமிநாதன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகி தனி அமைப்பை உருவாக்கி வரும் தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வந்தார். அவரும் இ விஜய்யின் தவெகவில் இன்று இணைகிறார். மேலும் காரைக்காலைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ அசனாவும் இன்று தவெகவில் இணையவுள்ளார். அடுத்து முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைய இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.