மதுரை  அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்ட கழகம், கல்லுப்பட்டி ஒன்றிய கழகத்தின் சார்பில் வருகின்ற பிப்ரவரி 23- ம் தேதி, நடைபெறும், 51 சமத்துவ சமுதாய திருமண விழா குறித்து  ஆலோசனை கூட்டம் டி. குன்னத்தூர் அம்மா கோயிலில் நடைபெற்றது.

 

திருமண நிகழ்ச்சி:

 

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை வழங்கினார். அப்போது ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது,” புரட்சித்தலைவரின் 106வது பிறந்த நாளை முன்னிட்டும், அம்மாவின் 75வது  பிறந்தநாளை முன்னிட்டும்,  கழக 51வது பொன்விழா ஆண்டை முன்னிட்டும், கழக அம்மா பேரவையின் சார்பில் கழக இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார், எனது மகள் பிரியதர்ஷினி உட்பட 51 ஏழை,எளிய மணமக்களுக்கு சமத்துவ சமுதாய திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

 



இந்த விழாவில் பேனர் யாரும் வைக்க வேண்டாம். ஆங்காங்கே கிராமங்கள் இருக்கும் சுவர்களில் விளம்பரம் செய்யுங்கள். இந்த திருமண விழா என்பது உங்கள் விழாவாகும். எல்லோரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளில் எத்தனை நிகழ்ச்சி நடைபெற்றாலும், அம்மாவிற்கு பிடித்தமான நிகழ்ச்சி இந்த திருமண விழா ஆகும்.

 

எடப்பாடியாருக்கு சோதனை:

 

கழக அம்மா பேரவையின் சார்பில், ஏற்கனவே 80 திருமணங்கள், அதனை தொடர்ந்து 120 திருமணங்கள் நடத்தினோம்.  கொரோனா காலகட்டத்தின் என்பதால் திருமணத்தை நாம் நடத்த முடியவில்லை. தற்பொழுது 51 திருமண விழாவை நடந்த எடப்பாடியார் நமக்கு நல் அனுமதியை வழங்கி உள்ளார். புரட்சிதலைவர் பின் அம்மா சந்தித்த சோதனை கொஞ்சம் நஞ்சம் அல்ல, 1996 காலகட்டத்தில் புரட்சித்தலைவி அம்மா அனுபவித்த வேதனைகள் எண்ணில் அடங்காது .அம்மா நின்று இந்த இயக்கத்தை தாங்கிப் பிடித்ததால் இந்த இயக்கம் தற்போது ஆலமரமாக உள்ளது . பயந்து ஓடியவர்கள் எல்லாம் இந்த இயக்கத்தை தாங்கிப் பிடிக்க முடியாது.

 



இன்றைக்கு எடப்பாடியார் இந்த இயக்கத்திற்காக ஏச்சுகளையும், பேச்சுகளையும், அவதூறுகளையும் கடந்து தான், இந்த இயக்கத்தை வழி நடத்தி வருகிறார். அம்மா எப்படிப்பட்ட சோதனைகளை சந்தித்தாரோ, அதே போல் சோதனைகளை எடப்பாடியார் சந்தித்து வருகிறார். இறுதியில் அவர் தான் வெற்றி பெறுவார் ஏனென்றால், இன்றைக்கு ஒன்றரை  கோடி தொண்டர்களும் எடப்பாடியார் பின்னால் உள்ளனர். 31 ஆண்டுகள் இந்த இயக்கம் ஆட்சி  இருந்து, அது மக்களுக்கு பொற்காலமாக இருந்தது.

 

முன்னோடி ஆட்சி:

 

குறிப்பாக எடப்பாடியார் ஆட்சி காலத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தார். 2,000 அம்மா மினி கிளினிக் கொண்டு வந்தார். அம்மாவின் திட்டங்களாக தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம், முதியோர் ஓய்வூதியத்தை 5 லட்சம் பேருக்கு கூடுதலாக வழங்கினார். இப்படி ஆண்டுக்கு 68,000 கோடி அளவில் சமூக நலப் பாதுகாப்பு திட்டங்களை மக்களுக்கு வழங்கி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையிலும், அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கே வழிகாட்டு வகையில் முன்னோடியாக இருந்தது.



அதனால் தான் தொடர்ந்து நான்கு முறை இந்தியா டூடேவால் தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு எடப்பாடியார் விருது பெற்றார். ஆனால் இன்றைக்கு திமுகவின் 19 மாதகால ஆட்சியில், எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை, எடப்பாடியார் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான், இன்றைக்கு ஸ்டாலின் திறக்குகிறார்.

 

பின்னோக்கி தமிழகம்:

 

அது மட்டுமல்ல  ஏழை எளிய மக்கள் பயன்பெற்ற தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி, அம்மா பரிசு பெட்டகம் ஆகியவற்றை மூடு விழா நடத்தி விட்டனர். சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால்விலைஉயர்வு, கட்டுமான பொருட்கள் உயர்வு, சமையல் பொருட்கள் உயர்வு என்று மக்களுக்கு விலைவாசி உயர்வை தத்து, இன்றைக்கு தமிழகத்தை பின்னோக்கி செல்ல வைத்து விட்டனர்.

 

சட்ட ஒழுங்கு எடுத்துக் கொண்டால் மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. திமுகஅரசின் மக்கள் விரோத செயல்களை நீங்கள் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி, மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில், அம்மாவின் ஆட்சி மலர நீங்கள் அயராவது பாடுபட வேண்டும் அதுதான் நமது லட்சியமாக இருக்க வேண்டும்"  என்று பேசினார்.