பொதுக்குழுவை நடத்தவிடாமல் செய்வதற்கு சமூகவிரோதிகள் முயற்சி என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக டி.ஜி.பி, அலுவலகத்தில், வரும் 11-ந் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நேரில் சென்று மனு அளித்துள்ளார். இந்த மனுவிற்கு பிறகு நிருபர்களுக்க பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,


“ அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ள பொதுக்குழுவிற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.  சமூக விரோதிகள் பொதுக்குழுவிற்கு வெளியே பொதுக்குழுவை நடத்தாமல் இருப்பதற்கு சூழலை ஏற்படுத்த உள்ள நிலைமையையும் டி.ஜி.பி.யிடம் தெரிவித்துள்ளோம்.




தேவையில்லாதவர்கள், வேண்டாதவர்கள், மூன்றாம் தரப்பினர் பொதுக்குழுவிற்கு வெளியே வந்து பிரச்சினை செய்ய வாய்ப்பு உண்டு. இந்த பிரச்சினைகள் ஏதும் வராமல் சட்ட ஒழுங்கை காத்திட வேண்டும். பொதுக்குழுவை பொறுத்தவரையில் சட்டரீதியாக நடைபெற இருப்பதால் அதற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழக டி.ஜி.பி.யும் மனுவை படித்துவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறினார்.  கண்டிப்பாக, காவல்துறை அந்த பாதுகாப்பை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.


பொதுக்குழு அமைதியாக நடக்கக்கூடாது என்று திட்டமிட்டு சமூகவிரோதிகளை தூண்டி குழப்பங்களை ஏற்படுத்த எதிர்தரப்பினர் முயற்சிக்கலாம். சட்டப்படி நாங்கள் செயல்படுவதால் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆன்லைன் என்பது ஒரு மாற்று ஏற்பாடு மட்டுமே. போக்குவரத்து நெருக்கடியை ஒழுங்குபடுத்துவது காவல்துறையினரின் வேலை. அந்த வேலையை காவல்துறைதான் செய்ய வேண்டும். பொதுக்குழு 11-ந் தேதி நடக்கும் என்று கூறியதே ஒரு அழைப்பு. அதன்படி பார்த்தால் 15 நாட்கள் ஆகிவிட்டது.”


இவ்வாறு அவர் கூறினார்.




அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை சர்ச்சை மேலோங்கியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மோதல் வலுத்துள்ளது. பொதுக்குழுவிற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று கூறியிருக்கிறார். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளரே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக கடிதம் எழுதினார். இந்த பரபரப்பான சூழலில், அடுத்து நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளார் என்று தெரியவந்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண