அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்தும், கொடநாடு கொலை வழக்கு குறித்தும் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை பூதாகரமாகி கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் கலவர பூமியாகவே காட்சியளித்தது. இந்நிகழ்வில் நிறைவேற்றப்படவிருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார். அதன்பின் அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையேயான பனிப்போர் நடைபெற்று வருகிறது. தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் என ஓபிஎஸ் கூற, அந்த பதவி காலாவதியாகி விட்டதாக இபிஎஸ் தெரிவிக்க ஜூலை 11 ஆம் தேதி நடக்கவுள்ள அடுத்த பொதுக்குழு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் "நதிகாக்கும் இரு கரைகள்" என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்டது என கூறி அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் தடாலடியாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று பத்திரிக்கையாளரை சந்தித்த அவர், அதிமுகவின் பொன் விழா ஆண்டில் கட்சி பிளவை நோக்கிச் செல்கிறது என வருத்ததுடன் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.
மேலும் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எங்கு பார்த்தாலும் அடியாட்கள் நிறைந்திருந்ததாகவும், அரைமணி நேரத்தில் ஒரு பொதுக்குழு கூட்டம் முடிந்தது என்றால் அது இந்த பொதுக்குழு தான் எனவும் கடுமையாக விமர்சித்திருந்தார். அதேசமயம் சில தினங்களுக்கு கொடநாடு கொலை வழக்கு குறித்தும் அவர் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். மருது அழகுராஜின் இந்த செயல்கள் அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், மருது அழகுராஜ் ஓபிஎஸ் உடன் கைகோர்த்துக்கொண்டு வாங்கிய கூலிக்கு உழைக்கிறார் என தெரிவித்துள்ளார். அவர் நமது அம்மா பத்திரிக்கையில் முறைகேடு செய்து அதன் காரணமாக விலக்கி வைக்கப்பட்டவர். பொதுக்குழு உறுப்பினர்களை கொச்சைப்படுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டுள்ளார். இதைக்கேட்டு அதிமுகவினர் அனைவரும் கொதித்து போயுள்ளனர். ஓபிஎஸ் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். அதைப்பற்றி ஏன் மருது அழகுராஜ் பேசவில்லை
மேலும் டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்தது ஏன்? ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா குறித்து சொல்லாதது ஏன்? தமிழக முதலமைச்சரை ரவீந்திரநாத் சந்தித்ததும் புகழ்ந்து பேசியதையும் மருது அழகுராஜ் ஏன் குறிப்பிடவில்லை? என அடுக்கடுக்கான கேள்விகளை ஜெயக்குமார் எழுப்பியுள்ளார். திட்டமிட்டபடி வரும் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் எங்கள் பக்கம் தான் தர்மம் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்