அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
“ சசிகலா மற்றும் சசிகலாவைச் சார்ந்தவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டால் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தோம். அதை தெளிவுபுடுத்தி ஒரு தீர்மானமே கொண்டு வந்திருந்தோம். அந்த தீர்மானத்தில் அனைவருமே கையெழுத்திட்டுள்ளோம். மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிககள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையொப்பமிட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வழிநடத்தும்போது, தர்மயுத்தம் நடத்தி ஓ.பன்னீர்செல்வம் இணைந்தபோது ஓ.பன்னீர்செல்வம் வைத்த முதல் கோரிக்கை எந்த காரணத்தைக் கொண்டும், எந்த காலத்திலும் சசிகலாவுடனும், அவரைச் சார்ந்தவர்களுடனும் எந்தவித உறவும் வைத்துக்கொள்ளாமல் இருந்தால் மட்டுமே அவருடன் நாங்கள் சேர்வோம் என்றார்.
அவர் தர்மயுத்தம் நடத்தியதே சசிகலாவையும், அவரைச் சார்ந்தவர்களையும் எதிர்த்துதான். ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும், நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் தர்மயுத்தம் நடத்தினர். அதை நினைவுபடுத்துவது என்னுடைய கடமை. எல்லாவற்றிற்கும் உடன்பட்டுதான் வந்தார்கள். அதைத்தான் நான் சொல்ல முடியும்.
இந்தபக்கம் ( கிழக்கு) உதிக்கும் சூரியன் அந்தப்பக்கம்(மேற்கு) உதித்தால் மட்டுமே அது நான் சசிகலா பக்கம் செல்வது நடக்கும். 2016ம் ஆண்டு என்னை அமைச்சராக்கியது ஜெயலலிதான். ஆனால், ஊடகங்களில் சசிகலாதான் எனக்கு 2016ல் அமைச்சர் பதவி வழங்கியதாக தவறான தகவல்களை பரப்புகின்றனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது எல்லாம் திரைத்துறையினர் மீது தாக்குதல் இருக்கும். இந்த விலைக்குதான் எனக்கு படத்தை விற்க வேண்டும். இல்லாவிட்டால் உன் படம் ஓடாது அப்படி எல்லாம் நிர்ணயம் செய்தார்கள். தங்களது சொந்த, பந்தங்கள்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று அப்போது செயல்பட்டனர். தற்போதும் அப்படியே செயல்படுவார்கள். இது ஒன்றும் புதிய செயல் அல்ல. இது ஏற்கனவே அவர்கள் செய்ததுதான்.
பாசத்தலைவன் பாராட்டு விழாவில் நடிகர் அஜித் வெளிப்படையாகவே கூறினார். என்னை வலுக்கட்டாயமாக விழாவிற்கு அழைத்து பாராட்ட சொல்கின்றனர் என்று கூறினார். அந்த நிலைமை திரைத்துறையினருக்கு இருந்தது. இதைத்தான் தி.மு.க. செய்யும். தாதாசாகேப் பால்கே விருது பெறும் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஜெயக்குமார் கட்சியில் சசிகலாவை சேர்ப்பது குறித்த தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்