முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் உள்ள ஆட்சி போட்டோ சூட் மட்டும் நடத்துகின்ற ஆட்சியாக உள்ளது, படம் பார்ப்பது, படம் எடுப்பது, இல்லை என்றால் படத்தை விற்பனை செய்வது இதைத் தவிர இந்த ஆட்சியாளர்களுக்கு வேற ஒன்றும் தெரியாது என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் காட்டமாக கூறினார்.


 மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதனால் சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆறு மற்றும் புதிய கொள்ளிடம் ஆறுகளுக்கு நடுவே உள்ள திட்டுக்காட்டூர், கீழ குண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் ஆகிய 3 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.


இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்பியுமான சி.வி. சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் சிதம்பரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.ஏ பாண்டியன், புவனகிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் உள்ளிட்டோர் சென்றனர்.


 திட்டுக்காட்டூர் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீரில் இறங்கி நடந்து சென்று பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்குள்ள பொதுமக்களுக்கு மதிய உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையால் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. இரண்டே கால் லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடும் அளவிற்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை இல்லை. ஆனால் மழை இல்லாமலேயே மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பொது மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். ஒரு லட்சம் கன அடி தண்ணீரை திறந்து விட்டாலே தாங்க முடியாத கிராம மக்கள், இரண்டே கால் லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.


இந்த அரசு செயல்படாத அரசாக இருக்கிறது. வெள்ள பாதிப்பு, பள்ளி மாணவி மரணம், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் இப்படி எந்த விஷயத்திலும் தமிழக அரசு செயல்படாத அரசாக இருக்கிறது. பெரிய அளவில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் அரசு நிர்வாகம் தூங்கி வழிகிறது. வெள்ளம் வடியவில்லை. ஆனால் முதலமைச்சர் சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார். சிதம்பரம் பகுதியில் வெள்ளம் வடியவில்லை. புயல் பாதுகாப்பு மையத்தில். போதிய வசதி இல்லை ஜெனரேட்டர் வசதி இல்லை. அதனால் அங்கு மக்கள் எப்படி தங்குவார்கள். இதைக்கூட செய்வதற்கு வக்கில்லாத நிர்வாகமாக மாவட்ட நிர்வாகம் இருக்கிறது.


 பாலத்தின் கரையிலேயே வந்து கரையிலேயே பார்த்து விட்டு அமைச்சர்கள் செல்கிறார்கள். இதுபோன்ற வெள்ள பாதிப்பை தடுக்கதான் அதிமுக ஆட்சியில் 500 கோடி ரூபாய் செலவில் ஆதனூர் - குமாரமங்கலம் இடையே தடுப்பணை கட்டப்பட்டது. அந்த பணி முடியும் தருவாயில் உள்ளது. 


அதன் பிறகு ஒரு தடுப்பணை கட்ட ஆய்வுக்காக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாறியதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆற்றின் கரைகளை பலப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. இப்போதாவது இந்த அரசு விழித்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண