தி.மு.க.வில் இருந்து பா.ஜ.க.விற்கு சென்ற முன்னாள் எம்.எல்.ஏ. கு.க. செல்வம் இன்று மாலை திடீரென தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் தன்னை மீண்டும் இணைத்துக்கொண்டார். 


இன்று மாலை சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக திருப்பூர் மக்களிடம் காணொலி காட்சி மூலமாக பரப்புரையை முடித்து வந்த முதல்வரும். தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார். பின்னர், மு.க.ஸ்டாலின் முன்னிலையிலே தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.




கடந்த 2016ம் ஆண்டு தி.மு.க. சார்பில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்தவர் கு.க.செல்வம். கடந்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு கு.க.செல்வம் திடீரென டெல்லி சென்றார். அங்கு அவர் பா.ஜ.க. தேசிய தலைவரான ஜே.பி.நட்டாவை சந்தித்தார். இதன் காரணமாக, அவரை தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் அவரை நீக்குவதாக தி.மு.க. தலைமை அறிவித்தது. பின்னர்,பா.ஜ.க.வில் இணைந்தார்.  


ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட கு.க.செல்வத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த தொகுதி குஷ்புவிற்கு வழங்கப்பட்டதால் கு.க.செல்வம் மிகுந்த அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில், பா.ஜ.க.வின் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஓரளவு விலகியே இருந்த கு.க.செல்வம் இன்று மீண்டும் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.




கு.க.செல்வம் முதன்முதலில் அ.தி.மு.க.வில் இருந்தார். பின்னர், 1997ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு தி.மு.க.வின் தலைமை நிலைய செயலாளராக பொறுப்பு அளிக்கப்பட்டது. பின்னர், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியை தோற்கடித்து சட்டசபை உறுப்பினரானார் என்பது  குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண