நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது. இதில் அதிமுக 65 இடங்களை கைப்பற்றியது.
திமுக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று, பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். மேலும், புதிய அமைச்சர்களும் தங்களின் துறைசார்ந்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இதுஓருபுறம் இருக்க இன்னும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் யார் என்று முடிவு செய்யப்படாம இருந்த நிலையில், திமுகவில் இந்த பதவிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளார் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி நிலவிவந்தது.
கடந்த 7ஆம் தேதி காலை திமுக ஆட்சியில் அமர்ந்ததை தொடர்ந்து, அன்று இரவு அதிமுகவின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பாக சென்னை ராயாப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டத்து. கூட்டத்தில், முதலில் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. எப்போதும் அமைதியாக இருந்து கடைசியல் கருத்து சொல்லும் ஓபிஎஸ், இம்முறை ஆரம்பத்திலேயே அடித்து விளையாடத் துவங்கியுள்ளார். ‛‛நீங்க எடுத்த தவறான முடிவு தான்... கட்சி தோற்க காரணம்...’’ என, எடுத்த எடுப்பிலேயே இபிஎஸ்-யை நோக்கி குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவ்வளவு தான், இபிஎஸ்-யும் பதிலுக்கு பாய்ந்துள்ளார்.
’’தமிழகம் முழுதும் செலவு பண்ணிருக்கேங்க... எவ்வளவு தேர்தல் வேலை பார்த்திருக்கேங்க...’’ என இபிஎஸ் கொதிக்க, ‛‛உங்க பணத்தையா செலவு பண்ணீங்க... கட்சிப்பணத்தை தானே செலவு பண்ணீங்க...’’ என, ஓபிஎஸ் கேட்க, இபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ஓபிஎஸ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‛‛கட்சிக்கு பண்ணதுதானாங்க... இல்லைன்னா இவ்வளவு ஜெயிச்சிருக்க முடியுமா...?’’ என, இபிஎஸ் கேட்க, ‛‛என்ன ஜெயிச்சோம்... ஆட்சியை இழந்துட்டோமே...’’ என கூலாக கேட்டுள்ளார் ஓபிஎஸ். ‛‛கொங்கு மண்டலம் முழுதையும் முழுசா தூக்கியிருக்கோம்; என்னோட ஏரியா முழுதும் கட்சி ஜெயிச்சிருக்கு; உங்க ஏரியா நிலைமை என்ன?’’ என, இபிஎஸ் குண்டை போட்டுள்ளார். மேலும், இரு தரப்பினரும் காரசாரமாக விவாதித்தனர். ஆனால் எந்த முடிவும் எட்டபடவில்லை. விவாதங்கள் நடைபெற்றன. அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க சூழல் உண்டாகவில்லை என்பதால், இந்த கூட்டம் வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திக்கவைப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய செய்ய அதிமுக
இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு கூட்டம் நடைபெற்றது
இதனிடையே, எந்த அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, அதிமுக அலுவலகம் முன்பு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கூட்டம் நடைபெற்ற நிலையில், இறுதியாக இபிஎஸ் அறிவிக்கப்பட்டார்.
முன்னதாக, ஓபிஎஸ் - இபிஎஸ்க்குள் இணக்கமான முடிவு எட்டப்படவில்லை என்றால் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக அறிவிக்கலாம் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் யோசனை கூறியது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் சபாநாயகர் தனபாலை எதிர்கட்சி தலைவராக ஓபிஎஸ் பரிந்துரை செய்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அங்கிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. அதிமுக தரப்பில் முறையான அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே இந்த விவகாரத்தில் நடந்த முழு விபரங்கள் தெரியவரும்.