தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.


பின்னர், முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,


விவசாயிகளுக்கு துரோகம்


“ கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் மேம்பட வேண்டுமென்று நாங்கள் அவர்களிடம் இருந்து வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்து மக்களுக்கு எங்கள் ஆட்சியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. நாங்கள் என்ன கேட்கிறோம் என்றால், கரும்பு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டியது தானே..? கரும்பு விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் அரசாங்கம் அவர்களிடம் கரும்புகளை கொள்முதல் செய்யும் என்று வலியுறுத்தினார்கள்.




அரசாங்கம் கரும்பை வாங்காவிட்டால் அவர்கள் கரும்பை எப்படி விற்பார்கள்? விவசாயிகளுக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை இந்த அரசாங்கம் செய்துள்ளது. கட்சியை பொறுத்தமட்டில் குறுகிய அளவில் செய்ய முடியும். தமிழ்நாடு முழுவதும் கரும்பு அளிக்க முடியாது. தினகரன் மற்றும் சசிகலா அணியாக வந்தாலும், தனியாக வந்தாலும் அ.தி.மு.க.வில் சேர்க்க மாட்டோம். ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.”


இவ்வாறு அவர் கூறினார்.


பொங்கல் பரிசுத்தொகுப்பு


தமிழ்நாடு அரசு பொங்கல்தொகுப்பு பரிசுத்தொகையை ஓரிரு தினங்களுக்கு முன்பு அறிவித்தது. அதில் ரூபாய் 1000 பணமும், ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த பொங்கல் பரிசுத்தொகுப்பில் பணம் வழங்காதது கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில், தற்போது ரூபாய் 1000 வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை ஜனவரி 2-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.




இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்படாததற்கு தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்கிய கரும்பு, வெல்லம், பச்சரிசி பொருட்கள் தரமற்ற முறையில் இருந்ததாக கடுமையான விமர்சனங்களை தி.மு.க. அரசு சந்தித்தது.


ஜெ.மரணம்:


மேலும், நேற்று சென்னையில் நிருபர்களைச் சந்தித்த சசிகலா ஜெயலலிதாவின் மரணத்தில் மறைப்பதற்கு எதுவுமே இல்லை என்றும், ஜெயலலிதாதான் வெளிநாட்டிற்கு சிகிச்சை அளித்துச் செல்ல வேண்டாம் என்றும் கூறியதாக கூறினார் என்றும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   


மேலும் படிக்க: Madurai: பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது ஏன்? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்


மேலும் படிக்க: Sasikala About J Death: ஜெ.தான் அப்படி சொன்னார்..! ஜெயலலிதா மரணத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை - சசிகலா