இந்தி கற்றுக்கொள்ள கூடாது என,  திணிப்பு நடத்தப்பட்டதாக  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய நிலையில், மக்களவை உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். 


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை:


மக்களவையில், நேற்றைய தினம் வங்கிகள் சட்டத்திருத்தம் தொடர்பாக  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, “  ஹிந்தியை திணிப்பதாக எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதனை நான் பாராட்டுகிறேன்; யாராலும் யார் மீதும் எதையும் திணிக்க முடியாது. அதனால்தான் பிரதமர் மோடியும், அனைத்து மாநிலங்களும் சொந்த மொழிகளை கற்க ஊக்குவிக்கிறார். உயர்கல்வி, பொறியியல், மருத்துவம் என பிராந்திய மொழிகளில் கற்க வேண்டும் என சொன்ன முதல் பிரதமர் மோடிதான்.


”நம்முடைய தமிழ்”


தமிழ்நாட்டிலும் தமிழ் மொழியில் மருத்துவம் படிக்க முடிவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் உங்களுடைய தமிழுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறேன்; என்னுடைய தமிழ்; சரி, நம்முடைய தமிழ். சின்ன சின்ன விஷயங்கள் பற்றி வாக்குவாதம் செய்ய வேண்டாம்.


தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்த அனுபவத்தை பற்றி சொல்கிறேன். நான் ஹிந்தி கற்க செல்லும் போது, எனது பள்ளியை தவிர மற்ற இடங்களில் ஏளனம் செய்யப்பட்டேன். தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, இந்த உப்பை சாப்பிட்டுக் கொண்டு ஹிந்தியை கற்க வேண்டுமா எனவும்,  வட இந்தியர்களின் மொழியை கற்க வேண்டுமா எனவும் கிண்டல் செய்தார்கள்.அந்த வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.


”என் மீது திணிப்பு”


இதையெல்லாம் செய்தது யார்?; அரசியல் கட்சியினரின் ஆதரவினால் பிற மொழிகளை கற்றவர்கள் விமர்சிக்கப்பட்டனர். வந்தேறிகள் என்று கூறுகிறார்கள்.


தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா? நான் ஹிந்தி கற்றால் அதில் என்ன தவறு? ; அவர்கள் வந்தேறி என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள், அது இங்கு இருக்கும் அரசியல் வியூகம்தானே?, என்னை ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டாம் என தமிழ்நாடு என் மீது திணித்தது; அது திணிப்பு இல்லையா?; 


எனக்கு என்ன மொழி வேண்டுமோ, அதை நான் கற்றுக் கொள்கிறேன்; அதில் என்ன பிரச்னை; நான் புறநானூறையும், திருவள்ளுவரையும் மேற்கோள்காட்டுகிறேன். தமிழ் மீது எனக்கு எந்த அளவு அன்பு இருக்கிறதோ அதே அளவு மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதிலும் இருக்கிறது


ஹிந்தி திணிப்பு கூடாது என்று சொல்வது சரியென்றால், நான் ஹிந்தியை கற்றுக் கொள்ளக் கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் என்பதையும் கேட்க விரும்புகிறேன். 


” தமிழ்நாட்டில் சுதந்திரம் உள்ளது ”


இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி தெரிவித்திருப்பதாவது “ இந்தி மொழி திணிக்கப்படுவதைத்தான், நாங்கள் விரும்பவில்லை; மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலாவில், மாணவர்களால் தமிழ் கற்க முடியாது.  தமிழ்நாட்டில் மக்கள் விரும்பினால் , இந்தியை கற்றுக்கொள்ளும் சுதந்திரம் உள்ளது என கனிமொழி தெரிவித்துள்ளார்.