தமிழ்நாட்டில் வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் காரணமாக நவம்பர் 30 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக பரவலான மற்றும் கடுமையான மழைப்பொழிவு தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெறப்பட்டது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.


பொதுமக்கள் அவதி 


குறிப்பாக, இந்த புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளது. இந்த மாவட்டங்களில் பெய்த பெருமழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் முழுவதும் மழைநீரால் மூழ்கியுள்ளது. இதனால், மின்சாரம் இல்லாமல் குடிநீர் இல்லாமல் மக்கள் கடந்த 3 நாட்களாக அவதிக்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் மக்கள் திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.


ரூபாய் 2 ஆயிரம் நிவாரணம்


அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிடவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


சென்னைக்கு ரூபாய் 6000 


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் பாதிப்புக்குள்ளானது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தநிலையில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ள மாவட்டங்களுக்கு 2000 ரூபாய் மட்டுமே நிவாரணமாக அளித்திருப்பது அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.‌ கடந்த ஆண்டு சென்னை பெருவள்ளத்தின்போது, ஏற்பட்ட பாதிப்பை விட இப்போது அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் குறைந்தபட்சம் அப்போது கொடுத்த அதே அளவு நிவாரணத் தொகை வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதைவிட குறைவாக வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பாதிப்பு அதிகமாக இருப்பதால் நிவாரணத் தொகை உயர்த்தி தரவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.