DMK: திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயருக்கு எதிராகவே திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

Continues below advertisement

மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள்:

திருச்சியில் திமுகவினர் இடையே மீண்டும் கோஷ்டி மோதல் வெடித்துள்ளது. மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மூத்த அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளரான திமுக கவுன்சிலர் கொண்டு வந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்றொரு அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆதரவு துணைமேயர் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொண்டு வந்த திட்டம் என்ன?

வியாழனன்று மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி கவுன்சில் கூட்டம் கூடியது. அப்போது, அரியமங்கலம் குப்பை கிடங்கில் கோழிக்கழிவு மறுசுழற்சி ஆலை அமைப்பதற்கான டெண்டர் வெளியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, நிலத்தடி நீரைப் பாதிக்கும் வகையில் கோழிக்கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேருவின் ஒப்புதலுடன் இந்தத் திட்டம் தயாராகி வருவதாகவும், புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டதாகவும் மேயர் விளக்கமளித்தார். 

Continues below advertisement

திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு:

உடனடியாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மண்டலத் தலைவரும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தீவிர ஆதரவாளருமான எம்.மதிவாணன், ”அரியமங்கலத்தில் உள்ள குப்பை மேட்டை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர். அவர்களின் எதிர்ப்பையும் மீறி, நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் சுத்திகரிப்பு கிணறுகள், நாய் கருத்தடை மையங்கள் மற்றும் கோழிக்கழிவு மறுசுழற்சி ஆலைகளை நிறுவியுள்ளது. இது அப்பகுதியை மேலும் பாதிக்கும். ஏற்கனவே அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஷை அணுகி திட்டத்தை திரும்பப் பெறக்கோரியுள்ளனர்” என வலியுறுத்தினார்.

திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு:

தொடர்ந்து திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிவாணன் வெளிநடப்பு செய்ய உத்தரவிட, “அவரை பின்தொடர்ந்து துணை மேயர் திவ்யா, மற்றொரு மண்டல தலைவர் ஜெயநிர்மலா மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவு கவுன்சிலர்கள், அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். மேயர் அன்பழகன் இந்தத் திட்டம் குறித்து விளக்கி இது பாதுகாப்பானது என்றும், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். நகர சுகாதார அதிகாரி (CHO) டாக்டர் விஜய் சந்திரனை, இதுகுறித்து அனைவருக்கும் விளக்குமாறு வலியுறுத்தினார்.

சுகாதார பிரச்னை:

அதன்படி, விஜய் சந்திரன் பேசுகையில், “மாநகராட்சி பகுதியில் 25 டன் எடையிலான மீன் மற்றும் கோழி கழிவுகள் உருவாகின்றன. அவை நீர் நிலைகளிலும், சாலையோரங்களிலும் கொட்டப்படுவதால் மக்களுக்கு சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க, மறுசுழற்சி ஆலை திட்டமிடப்பட்டது. இந்த ஆலை நவீன தொழில்நுட்பத்துடன் இயக்கப்படும். கழிவுகளை மீன் தீவனமாக மறுசுழற்சி செய்யும். இந்த ஆலைகள் மூலம் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதை சோதனைகள் நிரூபித்துள்ளன” என விளக்கமளித்தார். தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய மேயர் அன்பழகன், இந்தத் திட்டம் கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.

கோஷ்டி மோதல்:

திருச்சியில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்பதில் திமுக அமைச்சர்களான கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதன் தொடர்ச்சியாகவே, மாநகராட்சி கவுன்சில் கூட்டத்திலும் அமைச்சர்களின் ஆதரவு கவுன்சிலர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சொந்த கட்சி மேயருக்கு எதிராகவே, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மட்டுமின்றி பல மாவட்டங்களிலும், திமுகவின் மூத்த மற்றும் இளம் தலைவர்கள் இடையே உட்கட்சி மோதல் நிலவுவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், திமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.