எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி, ஜெயலலிதாவின் தளபதி, கொங்கு மண்டலத்தின் செயல் வீரர் என்று தனக்கென தனிச் செல்வாக்கை வைத்திருந்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இன்று விஜய் தலைமையை ஏற்றுக்கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கிறேன் என்று கலககுரல் எழுப்பி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி அன்று டிடிவி தினகரன், ஒபிஎஸ்-சுடன் ஊர்வலம் சென்றதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் அதிரடியாக தூக்கி எறியப்பட்டார் செங்கோட்டையன்.

Continues below advertisement

காலம் போன காலத்தில் TVK

காலம்போன காலத்தில் கட்சி பதவியும் போய், செல்வாக்கும் போன பின்னர் போக்கிடம் எதுவுமின்றி இன்று விஜய் கட்சியில் ஐக்கியமாகியிருக்கிறார் செங்கோட்டையன். இவரை நம்பி அதிமுகவில் இருந்து அவரது சமூகத்தை சேர்ந்த ஒரு முக்கிய நிர்வாகி கூட இவர் பக்கம் வரவில்லை. குறைந்தப்பட்சம் செங்கோட்டையனுக்காக குரல் கூட எழுப்பவில்லை. அவருக்கான செல்வாக்கு இப்போது ஒன்றுமே இல்லையென்று உணர்ந்ததால்தால்தான் எடப்பாடி பழனிசாமி, தயவு தாட்சண்யமின்றி அவரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.  தான் கலக குரல் எழுப்பினால் ஒன்றன்பின் ஒன்றாக அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசத் தொடங்குவார்கள் என்று பகல் கனவு கண்ட செங்கோட்டையனின் திட்டத்தில் மண் அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள். 

Continues below advertisement

தன் தலையில் மண்ணை வாரி இறைத்த யானை மாதிரி

யானை தன் தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டிக் கொண்ட கதையாக என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த செங்கோட்டையனை தமிழக வெற்றிக் கழகம் தன் பக்கம் இழுத்திருக்கிறது. ஏற்கனவே, அந்த கட்சியில் ஆயிரெத்தெட்டு பஞ்சாயத்துகள் நிலவி வரும் நிலையில், அங்குபோய் சேர்ந்திருக்கும் செங்கோட்டையன் இன்னொரு புஸ்ஸி ஆனந்தாக மாறிப்போயிருக்கிறார். அடித்தள கட்டமைப்புடன் பல ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனை கட்சியில் இணைத்தது த.வெ.கவிற்கு பெருமைப் பீத்திக்கொள்ள வேண்டுமானாலும் உதவுமே தவிர, அவரால் அந்த கட்சிக்கு ஒரு பிரயோஜனமும் இருக்கப் போவதில்லை. அதே மாதிரி செங்கோட்டையனுக்கும் ஒன்னும் கிடைக்கப்போவதில்லை. செங்கோட்டையனின் பலம் அதிமுகதான். ஆனால், அவர் அதிமுகவின் பலமே நான் தான் என்று தப்பு கணக்கு போட்டியிருக்கிறார். 

செல்வாக்கு இழந்த செங்கோட்டையனால் த.வெ.க.வில் என்ன செய்ய முடியும் ?

கட்சியில் இணைந்த செங்கோடையனுக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அங்கு புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ், ஜான் ஆரோக்கியசாமி என்று ஏகப்பட்ட அணிகள் இருக்கும் நிலையில், அவர்களை மீறி புதுக் கட்சியில் செங்கோட்டையனால் அப்படி என்ன செய்துவிட முடியும் ? அதோடு, கிட்டத்தட்ட 75 வயதை கடந்துவிட்ட அவருக்கு விஜய் கட்சியின் தொண்டர்கள், ரசிகர்களின் மனநிலையை எப்படி புரிந்துகொண்டு செயல்படபோகிறார் என்ற ஆயிரக் கணக்கான கேள்விகள் அவர்முன் இருக்கின்றன. கட்டுப்பாடுக் கொண்ட அதிமுக தொண்டர்களுக்கும், விஜய்க்காக  கட்டுப்பாடுகளையெல்லாம் தகர்த்தெறியும் த.வெ.க. தொண்டர்களுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது.  அதோடு, இந்த ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது அதிமுகவிற்கு அதிமுகவை சேர்ந்தவர்களுக்குமே ஒவ்வாத ஒரு பதவி. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஒபிஎஸ் இன்று எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார்  என்பது அனைவருக்கும் தெரியும். அதே கதிதான் செங்கோட்டையனுக்கும் விரைவில் நிகழவிருக்கிறது என்பது அரசியல் நோக்கர்களின் பார்வையாக இருக்கிறது.  இதயத்தின் அருகே இருக்கும் ட்டை பாக்கெட்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களை வைத்திருந்த செங்கோட்டையன், இனி விஜயின் புகைப்படத்தை அந்த இடத்தில் வைக்க வேண்டியிருக்கும் என்பதுதான் செங்கோட்டையனின் இத்தனை ஆண்டுகால அரசியல் வாழ்நாளின் சாதனையென மாறவிருக்கிறது.

ஆதவ் அர்ஜூனா தூண்டிலில் சிக்கிய மீனான செங்கோட்டையன்

பெரிய தலைவராக வேண்டும் என்ற இலக்கோடு அரசியலுக்கு வந்த ஆதவ் அர்ஜுனாவை அவரது உள்ளடி செயல்பாடுகள், நோக்கம் புரிந்து முதலில்கழற்றிவிட்டது திமுக.  பின்னர், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து அக்கட்சி தலைவர் திருமாவளவனையே ஓவர் டேக் செய்ய நினைத்தார். இதனைக் கண்டு கொதித்துப் போன வன்னிஅரசு, ஆளுர் ஷானவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் ஆதவ் அர்ஜூனாவைன் செயல்பாடுகள் பற்றி திருமாவளவனுக்கு ஆதாரத்தோடு எடுத்துக் காட்டிய பின்னர், அந்த கட்சியில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் செங்கோட்டையன் போலவே அப்போது இருந்த ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்தவர்தான் விஜய். விஜயிடம் தன்னை பெரிய வியூக வகுப்பாளர், அரசியல் சாணக்கியன் என்று கூறி, அந்த கட்சியிலும் இணைந்தார்.  பின்னர் அங்கும் அவரது வேலைகளை காட்டத் தொடங்கினார். குறிப்பாக விஜயின் அரசியல் ஆலோசகராக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமியை காலி செய்யும் வேலைகளையும், புஸ்ஸி ஆனந்தை ஓரங்கட்டும் பணிகளிலும் இறங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஆதவ் அர்ஜூனாவின் வலையில் விஜயே சிக்கியிருக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அவர் போட்ட இன்னொரு தூண்டிலில் இப்போது செங்கோட்டையனும் மாட்டிக் கொண்டிருக்கிறார். ஆதவ் அர்ஜூனாவின் இலக்கு முதலில் நம்பர் 2. அடுத்து நம்பர் 1 அதற்கு அவர் எதையும் செய்வார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதிலும், பாஜக சொன்னதால்தான் அதிமுக ஒன்றியணைய வேண்டும் என்று முயற்சி எடுத்தேன் என்று வெளிப்படையாக சொன்ன செங்கோட்டையனை, பாஜகவை கொள்கை எதிரியாக கொண்ட விஜய் எப்படி ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது அவரது கட்சி நிர்வாகிகளின் கேள்வியாக இருப்பதோடு. ஆதவ் அர்ஜூனாவின் சதி வலையில் இருவரும் விழுந்துள்ளார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். மீனோ, முதலையோ தண்ணீரில் இருக்கும் வரையில்தான் அதற்கு பலம், பாதுகாப்பு. கரைக்கு வந்துவிட்டால் இரண்டும் கருவாடுதான்.