மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 6வது நாளாக கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது...
‛‛தமிழகத்தின் முதல் அலை வீசிய போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி நோய் பரவலைத் தடுக்க முழு ஊரங்கை கடைபிடித்து அதனை மக்களையும் கடைபிடிக்க செய்தார் முதல் அலை ஊரடங்கின் போது அனைத்து தொழிலாளர்களுக்கும் விலையில்லா உணவுப் பொருள்கள் மற்றும் நிவாரண உதவிகளை அதிமுக அரசு வழங்கியது. தற்போது பதிவு செய்த மற்றும் பதிவு செய்யப்படாத அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் 2000 ரூபாய் நிவாரண நிதி வழங்கிட வேண்டும். மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளது. மதுரையில் மார்ச் மாதம் இறுதியில் 30 பேர்தான் சிகிச்சை பெற்றனர். தற்போது மதுரையில் 11 ஆயிரத்து 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் 153 பேர் பலியானார்கள் என்று அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இடுகாட்டில் எண்ணிக்கை அதிகமாக இருப்பது வேதனையாக உள்ளது.
குறிப்பாக ஆக்சிஜன் இல்லாமல் தென் மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகம் பேர் பலியாகி உள்ளனர். ஆகவே அரசு ஆக்சிஜன் தேவை அறிந்து மக்களின் உயிரைக் காக்க வேண்டும். மதுரையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார். ஆய்வுக்கூட்டம் சம்பிரதாயமான ஆய்வுக் கூட்டமாக இல்லாமல், மதுரை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மக்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்கும் வகையில் இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மதுரையில் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி வெளிப்படைத்தன்மையாக அறிவிக்க வேண்டும். சோர்வடைந்துள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கிட வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.
முதல் அலையில் அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு 6,996 ஆக இருந்தது. தற்போது ஒருநாள் பாதிப்பு 34,875 ஆக உள்ளது தற்போது சில தளர்வுடன் கூடிய ஊரடங்கு இருந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முதல் அலையின் போது தளர்வு இல்லாத ஊரடங்கு அறிவித்து, அதற்கு மக்கள் ஒத்துழைப்பை பெற்று வென்று காட்டினோம். வருகின்ற மே 24 ஆம் தேதி ஊரடங்கு முடிகிறது. தளர்வு இல்லாத ஊரடங்கை முதல்வர் செயல்படுத்தினால் தான் சங்கிலித் தொடர் போல் வரும் இந்த பாதிப்பை தடுக்கலாம். வாழ்வாதாரத்தை இழந்து வரும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதை கூறுகிறேன். அரசியல் உள் நோக்கம் கிடையாது, என்று கூறினார்.