தர்மத்தின் பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 


அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் கடந்த ஜூலை 11 ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்றும் உறுதியாகியிருக்கிறது. 


மேலும் பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அத்தனை மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷி கேஷ்ராய் அமர்வு  முன்னதாக அளிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர். இந்த தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம் அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலான அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கியும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.


இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை ஏபிபி நாடு சார்பில் போன் மூலம் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது பேசிய அவர், ”உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் இறைவன் எங்கள் பக்கம் இருக்கிறார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியானது எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது என்பதை இந்த தீர்ப்பு காட்டுகிறது. 


தர்மம் வெல்லும், வெல்லும் என்று எதிர் தரப்பினர் சொல்லிகொண்டு இருந்தார்கள். ஆனால், அதே தர்மம்தான் எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது. இந்த தீர்ப்பு மாபெரும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இதேபோல், ஈரோடு கிழக்கு தொகுதியிலும் 50,000 வாக்குகள் வித்தியாசத்திலிருந்து 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அனைத்திந்திய அண்ணா திமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றிபெறும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். 


ஓபிஎஸ் எதிர்காலம் என்ன..?


அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் நீக்கப்பட்டதாக நிறைவேற்றிய தீர்மானம் சட்டப்படி செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓபிஎஸ் எதிர்காலம் நாசமா போச்சு, முடிஞ்சு போச்சு. இதுவரை அவசர சிகிச்சை பிரிவில் இருந்தவர்களின் நிலைமை உச்சநீதிமன்ற தீர்ப்பால் மொத்தமாக முடிந்துவிட்டது. 


மீண்டும் ஓபிஎஸ் இணைந்தால் ஏற்றுகொள்வீர்களா..? 


அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆகலாம். அத்தைக்கு மீசை முளைக்காவிட்டால் சித்தப்பா ஆக முடியாது. இனி அதிமுகவிற்கு வந்தால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை ஏற்கமாட்டோம்” என்று தெரிவித்தார்.