அதிமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த சில வாரங்களாகவே கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து மோதலில் இருந்து வருகிறார். 

Continues below advertisement

இந்த சூழலில், நேற்று ராமநாதபுரம் பசும்பொன்னில் அமமுக பாெதுச்செயலாளர் தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இணைந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதுடன் பேட்டியளித்திருந்தார். செங்கோட்டையனின் செயல்பாடுகள் எடப்பாடி பழனிசாமி தரப்பினரை கடும் அதிருப்தியை உண்டாக்கியது. 

செங்கோட்டையன் நீக்கம்:

இந்த சூழலில் செங்கோட்டையனை அதிமுக-வில் இருந்து நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு அதிமுக-விலும், தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

Continues below advertisement

அதிமுக அறிவிப்பு:

இதுதொடர்பாக, எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 

கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பது தெரிந்திருந்தும் அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிற காரணத்தினால் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் எம்.எல்.ஏ. இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காரணம் என்ன?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக ஒருங்கிணைப்பை மேற்கொள்ள செங்கோட்டையன் வலியுறுத்தினார். அதாவது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தினார். 

அவரது கருத்து அதிமுக-வில் சலசலப்பை உண்டாக்கியது. பின்னர், அவரிடம் இருந்து அவரது கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டது. பின்னர், அவரும் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துக் கொள்ளவே இல்லாத சூழலில், நேற்று பசும்பொன்னில் தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துடன் செங்கோட்டையன் ஒன்றாக மரியாதை செலுத்த சென்றது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது. 

கொங்கு மண்டலத்தில் பாதிக்குமா?

செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நேற்றே மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கை கொங்கு மண்டலத்தில் அதிமுக வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வியை உண்டாக்கியுள்ளது. 

77 வயதான செங்கோட்டையன் எம்.ஜி.ஆர். காலம் முதல் அதிமுக-வில் செயல்பட்டு வருபவர். எம்ஜிஆர் தலைமையில் அதிமுக முதன்முறையாக தேர்தலை எதிர்கொண்ட முதல் தேர்தலிலே வெற்றி பெற்று அதிமுக-வின் எம்.எல்.ஏ.வானவர். 

10 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள செங்கோட்டையன் ஒரே ஒரு முறை மட்டுமே தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். முதன் தேர்தலில் சத்யமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட அவர் அதன்பின்பு கோபிச்செட்டிப்பாளையத்தின் எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்து வருகிறார்.