ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜக கட்சி சார்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ ஷஷி பர்மர் செய்தியாளர் பேட்டியின்போது கண்ணீர் விட்டு அழுதார்.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்:
ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் எனவும், அக்டோபர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 12 ஆம் தேதியாகவும் அதைத் தொடர்ந்து செப்டம்பர் 13 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனைக்கான தேதியாகவும், செப்டம்பர் 16 ஆம் தேதிக்குள் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணீர் விட்ட பாஜக
இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் 67 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியல் வெளியானது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், வாய்ப்பு கிடைக்காத சிலர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதில் பாஜக முன்னாள் எம்எல்ஏ சசி ரஞ்சன் பர்மர், செய்தியாளர் பேட்டியின் போது கண்ணீர் விட்டு அழுத சம்பவம் கட்சியினுள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். வரவிருக்கும் ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாதது குறித்த செய்தியாளர் கேள்விகளுக்கு சசி ரஞ்சன் வீடியோவில் பதிலளித்ததாவது "எனது பெயர் பட்டியலில் இருக்கும் என்று நான் நினைத்தேன் என தெரிவித்தார். இதையடுத்து , பேசும்போதே கண்ணீர் விடும் காட்சியையும் வீடியோவில் பார்க்க முடிந்தது
"எனது பெயர் பரிசீலிக்கப்படும் என்று நான் மக்களுக்கு உறுதியளித்தேன். இப்போது நான் என்ன செய்வது? நான் உதவியற்றவனாக உணர்கிறேன்," என்று எம்.எல்.ஏ அழுது கொண்டே கூறினார். நேர்காணல் செய்பவர், மனம் தளராமல் இருங்கள் என தெரிவித்தார்.
"எனக்கு என்ன நடக்கிறது... நான் நடத்தப்பட்ட விதம்... நான் மிகவும் வேதனைப்படுகிறேன். என்ன மாதிரியான முடிவுகள் எடுக்கப்படுகின்றன? என பர்மர் குறிப்பிட்டார்.
அதிருப்தியில் பாஜகவினர்:
பாஜக வேட்பாளர் பட்டியில் வெளியானதில் இருந்து பாஜகவில் உட்கட்சி பூசல் நிலவுவதை பார்க்க முடிகிறது. அமைச்சர் ரஞ்சித் சவுதாலா மற்றும் எம்எல்ஏ லட்சுமண நாபா ஆகியோர் சீட்டு மறுக்கப்பட்டதால் ராஜினாமா செய்தனர்.சௌதாலா சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்தார், அதே நேரத்தில் நாபா காங்கிரஸ் தலைவர் ஹூடாவை அவரது இல்லத்தில் சந்தித்து கட்சியில் சேர விருப்பம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஹரியானாவில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது