ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுக்குழு கூடி முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. 


“கடந்த ஜுலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போதைய சூழலில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது. இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் பழனிசாமியின் கோரிக்கை குறித்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்” எனவும் நீதிமன்றம்  தெரிவித்தது.


மேலும், உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் விதிகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இரட்டை இலை சின்னம் இதுவரை முடக்கப்படவில்லை, அதிமுக வழக்குகள் நிலுவையில் இருப்பதால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியது. 


நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து அதிமுகவின் இரு அணிகள் தரப்பிலும் பரபரப்பு கூடியுள்ள நிலையில், முன்னதாக அதிமுக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


“ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அதிகாரப்பூர்வ வேட்பாளரை கழக பொதுக்குழு உறுப்பினர்கள் சுற்றறிக்கை மூலமாகத் தேர்வு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி அனைத்து கழகப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் விரிவான சுற்றறிக்கை இன்று (பிப்.04) அனுப்பப்பட்டுள்ளது.


கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மேற்படி சுற்றறிக்கையை முறையாக பூர்த்தி செய்து அதனை பிப்.05 (நாளை) அன்று இரவு 7 மணிக்குள் சென்னை, அவ்வை சண்முகம் அமைந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் என்னிடம் சேர்த்து விடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.




அதில் குறிப்பிட்டுள்ளதாவது, இரட்டை இலை சின்னம் தொடர்பான, படிவம் A, B விண்ணப்பங்களில் தமிழ்மகன் உசேன் கையொப்பமிட அதிகாரமளிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது .


மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் தென்னரசு என்பதை தேர்தல் ஆணையத்துக் தெரிவிக்க தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரமளிக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது .


இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க கோரியும், அதிமுக வேட்பாளராக தென்னரசு தேர்வு செய்வது குறித்தும் சம்மதமா, மறுப்பா என்பதும் குறித்தும் தெரிவிக்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.