செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்.ஜி.ஆர். அவர்களின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

 



 

இதில் அக்கட்சியை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய டிடிவி தினகரன், “புரட்சி தலைவர் எம்ஜிஆரை குறை கூற திமுகவினர் யோசிப்பார்கள். திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆட்சி அமைக்க உதவியவர் எம்.ஜி.ஆர் தான். திமுகவினர் வார்த்தைக்கு வார்த்தை சமூக நீதி என்று சொல்கிறார்களே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 50% இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் எம்ஜிஆர் , அதனை ஜெயலலிதா 69% மாற்றினார். பழனிசாமியும், பன்னீர் செல்வமும் போடும் போட்டி டெல்லி வரை சென்று நிற்கிறது. புரட்சி தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் இன்று குண்டர்கள் கையிலும், டெண்டர் விடுபவர்கள் கையிலும் சிக்கி தவிக்கிறது.



 

பொறுத்திருந்து பார்ப்போம்

 

எடப்பாடி பழனிசாமியை போன்ற துரோகி உலகத்தில் யாரும் இருக்க முடியாது. தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வரப்போகிறது அதுவும், கொங்கு மண்டலத்தில் நடைபெற உள்ளது. இருவரும் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். திமுகவினர் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர். ஈரோடு தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும். ஒன்று சேர வேண்டும் என சொல்வது எடப்பாடி பழனிச்சாமியையும், பன்னீர் செல்வத்தையும் சொல்லவில்லை அம்மாவின் தொண்டர்களை பார்த்து சொல்கிறேன்.



 

2000-நோட்டை தான் சின்னமாக வைத்து நிற்க வேண்டும்

 

 பழனிசாமியிடம் இருக்கும் சின்னமும்  கிடைக்க போவதில்லை, ஏனென்றால் பன்னீர்செல்வம் தற்போது போட்டியிட போவதாக சொல்கிறார். பணத்தை வைத்துக்கொண்டு தான் இந்த தேர்தலை சந்திக்க முடியும், சின்னம் இல்லாததால் 2000-நோட்டை தான் சின்னமாக வைத்து நிற்க வேண்டும். இந்த தேர்தலில் இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம்” என பேசினார். இக்கூட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினர் ஏராளமான கலந்து கொண்டனர்.