ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறும் நிலையில், மனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருவதுடன், கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இச்சூழலில் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசுதான் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் முன்னதாக அறிவித்தார்.
இடைத்தேர்தல்:
தென்னரசு எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டார். இதனிடையே இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ளவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்ற வாரம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் ஸை அங்கீகரிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது. அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென ஓபிஎஸ் தரப்பு பதில் மனு தாக்கல் செய்திருந்தது.
உச்சநீதிமன்றம் உத்தரவு:
இதனிடையே ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுக்குழு கூடி முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
“கடந்த ஜுலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போதைய சூழலில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது. இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் பழனிசாமியின் கோரிக்கை குறித்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்” எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் விதிகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இரட்டை இலை சின்னம் இதுவரை முடக்கப்படவில்லை, அதிமுக வழக்குகள் நிலுவையில் இருப்பதால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து அதிமுகவின் இரு அணிகள் தரப்பிலும் பரபரப்பு கூடியுள்ள நிலையில், முன்னதாக அதிமுக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அதிகாரப்பூர்வ வேட்பாளரை கழக பொதுக்குழு உறுப்பினர்கள் சுற்றறிக்கை மூலமாகத் தேர்வு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி அனைத்து கழகப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் விரிவான சுற்றறிக்கை இன்று (பிப்.04) அனுப்பப்பட்டுள்ளது.
கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மேற்படி சுற்றறிக்கையை முறையாக பூர்த்தி செய்து அதனை பிப்.05 (நாளை) அன்று இரவு 7 மணிக்குள் சென்னை, அவ்வை சண்முகம் அமைந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் என்னிடம் சேர்த்து விடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.