Continues below advertisement

சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 100 முதல் 120 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க திமுக திட்டமிட்டு வருகிறது. ஆனால் இதற்கு வாய்ப்பே கொடுக்க கூடாது என அதிமுக- பாஜக கூட்டணி காய நகர்த்தி வருகிறது. அதில் மற்றொரு பக்கம் திரைத்துறையில் இருந்து அரசியலில் கால் பதித்துள்ள நடிகர் விஜய் இளம் தலைமுறை வாக்காளர்களை வைத்து மிரட்டி வருகிறார். இதுவரை பார்த்திராத தேர்தலாக தமிழக சட்டசபை தேர்தல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜகவால் தமிழகத்தில் கால் பதிக்க முடியவில்லை.

40 தொகுதிகளை குறிவைக்கும் பாஜக

பல வருடங்களுக்கு பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி உதவியோடு சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்கள் நுழைந்துள்ளனர். இதை 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தை எட்ட முடிவு செய்துள்ளது. அதற்கு ஏற்ப பாஜகவிற்கு சாதகமாக 40 தொகுதிகளை குறிவைத்து ஏற்கனவே களப்பணியை தொடங்கியுள்ளது. அதிலும் திமுக குறைந்த வாக்குகளில் வெற்றி பெற தொகுதிகளின் பட்டியலையும் எடுத்து வைத்து அலசி ஆராயந்து வருகிறது. இந்த நிலையில் எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என சபதத்தோடு களத்தில் இறங்கியுள்ளார் பாஜக மூத்த தலைவர் அமித்ஷா,

Continues below advertisement

4ஆம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா

அதற்கு ஏற்ப தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளாராக தனது நம்பிக்கைக்குரிய நபரான பியூஸ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை நியமித்துள்ளார். இதனையடுத்து அதிமுக- பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கவும் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜனவரி 4-ந்தேதி தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, அன்றைய தினம் புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும் 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பாதையாத்திரை இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார்இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பாஜக நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனையில் திமுகவை வீழ்த்த எடுக்கப்படவுள்ள வியூகங்கள் தொடர்பாக கேட்டறிவதோடு, ஆலோசனையும் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இபிஎஸ்- அமித்ஷா சந்திப்பு

இதனையடுத்து ஜனவரி 5-ந்தேதி ஸ்ரீரங்கத்தில் 'மோடி பொங்கல்' நிகழ்ச்சியிலும் அமித்ஷா கலந்துகொள்ளவுள்ளார். காலை 11 மணி அளவில் மன்னார்புரம் ராணுவத்திடலில் 3 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் "மோடி பொங்கல்" விழாவில் பங்கேற்க பாஜக கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாகவோ அல்லது நிகழ்ச்சிக்கு பிறகோ அமித்ஷாவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசவுள்ளார்.

அப்போது கூட்டணியில் இடம்பெறவுள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு, பாஜகவிற்கு தொகுதிகள் எத்தனை, ஓபிஎஸ்- டிடிவியை மீண்டும் இணைப்பது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியை பிடித்தாக வேண்டும் என உறுதியாக இருக்கும் அமித்ஷா, தித்திக்கும் பொங்கல் பண்டிகை முதல் அடுத்த 2 மாதங்களுக்கு தமிழகத்தை டார்கெட் செய்து களத்தில் இறங்க முடிவு செய்துள்ளதாக பாஜக வட்டார தகவல் கூறப்படுகிறது.