கரூரில் விஜய் பரப்புரையில் நடந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யைப் பார்க்க வந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக மாவட்டச் செயலாளர் கைது:
இந்த துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மட்டும் இரங்கல் தெரிவித்த நிலையில், அவரது கட்சி நிர்வாகிகள் வேறு யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை. தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு தொலைபேசியை அணைத்து வைத்து தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்து வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
இந்த சூழலில், கரூர் மாவட்ட துயர சம்பவத்தைத் தொடர்ந்து கரூர் மாவட்ட தவெக மாவட்டச் செயலாளர் மதியழகனை போலீசார் இன்று கைது செய்தனர். கடந்த 2 நாட்களாக தலைமறைவாக இருந்த அவர் இன்று கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீசார் அவரைத் தேடி வந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் கைது?
மேலும், இந்த விவகாரத்தில் போலீசார் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முக்கிய நிர்வாகி சிடி நிர்மல்குமார் ஆகியோரையும் கைது செய்ய அரசு மும்முரம் காட்டி வருகிறது. இவர்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பாஜக கூட்டணி சார்பில் உண்மை கண்டறிய குழு ஒன்றையும் அமைத்துள்ளனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் எதிரொலித்து மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், விஜய்யின் அடுத்தகட்ட நகர்வு எப்படி இருக்கப்போகிறது? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது.
நேரில் வராத தவெக நிர்வாகிகள்:
பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரங்கல் தெரிவித்தது மட்டுமே விஜய் செய்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக அவர் வராதது அவரது கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி தவெக தொண்டர்களும், நிர்வாகிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற மருத்துவமனைக்கு வராததும் மிகப்பெரிய ஆதங்கத்தை பாெதுமக்கள் மத்தியி்ல் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.