தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும், குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் கடந்த திமுக ஆட்சி மீது தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியிருந்தார். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ளார். இதனையடுத்து பெண்கள் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடிப்படையை தொடங்கிய முதலமைச்சர் விஜய்,  இனி பெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

Continues below advertisement

ஆனாலும் தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், குமிடிப்பூண்டி, கோவை என பல இடங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் நடைபெற்றிருப்பது தவெக அரசிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக தவெக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. குற்றச் செயல்கள் நடைபெறுவதில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், கடந்த 1 மாதமாக நடப்பதை எல்லாம் பார்த்தால், தமிழக மக்களை, குறிப்பாக பெண்களை, இன்றைய ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும் போல!

Continues below advertisement

அந்த அளவிற்கு சொந்த கட்சி நிர்வாகிகள் பல குற்றங்களை, குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை ஒரு முதல்வராகவோ, கட்சித் தலைவராகவோ இன்றைய பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் என்ன செய்தார்? 9-5 Desk Job போல முதல்வர் பணியை பார்க்கும் இன்றைய முதலமைச்சர், அந்த 9-5 நேரத்திலாவது சட்டம் ஒழுங்கைக் காப்பது குறித்து எதாவது பணியை செய்தாரா?

இதில், இன்றைய முதல்வர் உள்துறையை வேறு ஒரு அமைச்சரிடம் கொடுத்துவிடும் முடிவில் இருப்பதாக சில செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன.  இளம்பெண் பாலியல் வழக்கில் கைதாகியுள்ள தவெக நிர்வாகி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.