சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கூட்டம் முடிந்தபின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செங்கோட்டையன் அவரை புறக்கணிப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் கொந்தளிப்பாக பதிலளித்தார். அதற்கு செங்கோட்டையன் என்ன பதில் அளித்துள்ளார் என பார்ப்போம்.


“அவர போய் கேளுங்க சார்“ பத்திரிகையாளரிடம் சீறிய எடப்பாடி பழனிசாமி


சட்டப்பேரவை கூட்டம் முடிந்தபின், வேளாண் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிப்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செங்கோட்டையன் தொடர்ந்து உங்களை தவிர்த்து வருகிறாரே, அது ஏன் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு உடனே கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி, “அத அவர் கிட்ட போய் கேளுங்க, அப்பதான் காரணம் தெரியும்.. என் கிட்ட கேட்டா எப்படி தெரியும்.. அவர போய் கேளுங்க சார், ஏன் தவிர்த்தார் என அவரை போய் கேளுங்க என ஆவேசமாக கூறினார்.


மேலும், அதைப் பற்றி பேச இது இடமில்லை, தனிப்பட்ட பிரச்னைகளை பற்றி இங்கே கேட்க வேண்டாம் என கூறிய இபிஎஸ், இங்கே பலர் வரவில்லை, அது குறித்து கேட்க முடியுமா.? அவரவருக்கு பல வேலைகள் இருக்கும் என்று மழுப்பலாக பதிலளித்தார். மேலும், இது சுதந்திரமாக செயல்படும் கட்சி, திமுக போன்று அடிமைத்தனம் இங்கு கிடையாது எனக் கூறி, கிடைத்த கேப்பில் திமுகவை விமர்சித்தார்.


செங்கோட்டையனின் பதில் என்ன.?


சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன், இரண்டு நாட்களாக, தனது கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை தவித்து வந்தார். நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும் பங்கேற்காத அவர், இன்று சபாநாயகரை தனியாக சந்தித்துள்ளார்.


இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியிடம் அது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, செங்கோட்டையனிடமே சென்று கேளுங்கள் என்று கூறியதால், பத்திரிகையாளர்கள் உடனடியாக செங்கோட்டையனிடம், எடப்பாடி பழனிசாமியின் பதில் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால், செய்தியாளர்களின் இந்த கேள்விக்கு பதிலளிக்க செங்கோட்டையன் மறுத்துவிட்டார். அது குறித்து தன்னால் எதுவும் பேச முடியாது என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார் செங்கோட்டையன்.


செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே பிரச்னை இருந்துவருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தற்போது இருவரும், ஒருவரைப் பற்றி ஒருவர் பதிலளிக்க மறுத்துள்ளது, அந்த பிரச்னையை ஊர்ஜிதம் செய்வதாக உள்ளது. இந்த பிரச்னை அதிமுகவில் பிளவை ஏற்படுத்துமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. செங்கோட்டையன் சமாதானம் செய்யப்படுவாரா அல்லது பிரச்னை பூதாகரமாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.