அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று தவெக-வில் இணையும் விழா மகாபலிபுரம் தனியார் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் உள்பட அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தொடக்கத்தில் அனைவரும் இருக்கைகளில் அமர்ந்தால் அரங்கம் முழுமையடைந்தது. ஆனால், எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச தொடங்குவதற்கு முன்னரே அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் வெளியேறத் தொடங்கினர். இதனால், பின்னால் போடப்பட்டிருந்த இருக்கைகள் அனைத்தும் காலியாகத் தொடங்கின.
சாப்பிடச் சென்ற தொண்டர்கள்
நிர்வாகிகள் தவெக-வில் இணைந்த பின்னர் 12.30 மணிக்கு மேல் அனைவருக்கும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், காலை 11.45 மணிக்கே மதிய உணவு தயார் ஆன நிலையில், அதனை பரிமாறவும் தொடங்கியுள்ளனர். இதனால், பிரியாணி போடுகிறார்கள் என்ற தகவல் அரங்கத்தில் உள்ளே இருந்தவர்களுக்கு வந்ததும் சாரை சாரையாக எழுந்து பெரும்பாலோனோர் சாப்பிடச் சென்றுவிட்டனர். அரங்கத்தை நிரப்ப வேண்டும் என்று காலையில் சாப்பிடமால் இருக்கைகளை பிடிக்க வந்தவர்களுக்கு பசி, கபகப என எடுத்ததாலும் பிரியாணியின் மணம் அரங்கம் உள்ளே வரை வந்ததாலும் அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் சிறையை திறந்த பறக்கும் பறவைபோல சாப்பிட இடத்திற்கு விஜயபாஸ்கர்கள் அழைத்து வந்த கூட்டம் பறந்து போனது.
பேச வந்த சி.விஜயபாஸ்கர் – சமாளிப்பு
இறுதியாக சி.விஜயபாஸ்கர் பேச வந்தபோது பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. முன்னர் போடப்பட்டிருந்த இருக்கைகளில் மட்டுமே தொண்டர்கள் அமர்ந்திருந்தனர். இதனை கண்டு அப்செட் ஆனாலும் அதை லாவகமாக சமாளித்தார் விஜயபாஸ்கர். நிகழ்வுகள் அத்தனையும் நேரலையில் சென்றுகொண்டிருந்ததால், அவர் பேசும்போது, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை அருகே இருந்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தாலும் அவரின் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இருக்கைகளை விட்டு தொண்டர்கள் எழுந்து மேடையை நோக்கி வந்து, அருகே நின்றுகொண்டு உங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்று பேசி சமாளித்தார். ஆனால், ஊடகங்களில் இருக்கைகள் காலியாக உள்ளதையும், சாப்பாட்டிற்காக தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றதையும் தொடர்ந்து காட்டிய நிலையில், விஜயபாஸ்கரின் சமாளிப்பு அரங்கத்தில் எடுப்பட்டாலும் வெளியில் எடுபடாமல் போனது. இதனால், விஜயபாஸ்கர் அப்செட் ஆனதாக அருகே இருந்த நிர்வாகிகள் தெரித்தனர்.
