கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். வானதி சீனிவாசன் 52,526 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். கமல்ஹாசன் 51,087 வாக்குகளையும், மயூரா ஜெயகுமார் 41,669 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர்
கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,25,416, பெண் வாக்காளர்கள் 1,25,950. மூன்றாம் பாலினத்தவர்கள் 23 என மொத்தம் 2,51,389 வாக்காளர்கள் உள்ளனர்.
2011 சட்டமன்றத் தேர்தலில் தான் கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. இதுவரை, மூன்று சட்டமன்றத் தேர்தல்கள் இங்கு நடைபெற்றுள்ளன.
2011ல் அதிமுக வேட்பாளர் துரைசாமி 25,000க்கும் அதிகமான வாக்க வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை தோற்கடித்தார். 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் காங்கிரஸ் வேட்பாளார் மயூர ஜெயக்குமாரை 17,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடும் போட்டி நிலவுகிறது?
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் புதிதாகக் களமிறங்கும் கட்சி மக்கள் நீதி மய்யம். மொத்தம் 135 வேட்பாளர்கள் அந்தக் கட்சியிலிருந்து களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். சென்னையிலிருந்து போட்டியிடுவார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியப்படுவதற்கில்லை.
2019 மக்களவைத் தேர்தலைச் சந்தித்த அந்தக் கட்சி கோவை பகுதியில்தான் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் வானதி சீனிவாசன், காங்கிரஸின் மயூரா ஜெயக்குமார் என இரண்டு தேசியக் கட்சி வேட்பாளர்களை எதிர்கொள்கிறார் கமல்ஹாசன். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியின் வேட்பாளராகத் தெற்கு தொகுதியில் களமிறக்கப்பட்ட மருத்துவர் மகேந்திரன் பாரதிய ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாமிடத்தைப் பிடித்தார்.
பரப்புரைக்காக கோவைக்கு சென்ற கமல், அங்கேயே தங்கி, கோவை தெற்கு தொகுதி மக்களிடம் மக்களோடு மக்களாக பழகிவந்தார். ஜாக்கிங், ஆட்டோவில் சென்று பரப்புரை மேற்கொள்வது என அனைவரின் கவனத்தையும் அவர் ஈர்த்தார். பதிலுக்கு வானதி சீனிவாசனும் ஆட்டோவில் சென்று பரப்புரை மேற்கொண்டார்.
துக்கடா அரசியல்வாதி என வானதி சீனிவாசனை கமல்ஹாசன் விமர்சிக்க, பதிலுக்கு உதட்டளவில் மட்டுமே கமல் சேவை செய்யக்கூடியவர் என்று வானதி கூற, அரசியல் களமே அப்போது சூடு பிடித்தது. இந்தத் தொகுதி முழுக்க முழுக்க நகரப்பகுதி என்பதால் பலதரப்பட்ட சமூகத்தினரும் வசிக்கின்றனர். வடமாநிலத்தவர்களும் தொகுதி முழுவதும் பரவலாக வசித்து வருகின்றனர்.
வானதி சீனிவாசன், கமல்ஹாசன் இருவருமே இங்குள்ளவர்களுக்கு அறியப்பட்ட முகம் என்பதால், இந்தத் தேர்தலில் யார் ஜெயித்தாலும், தோற்றாலும் பெரியளவில் வாக்கு வித்தியாசம் இல்லாமல், நெருங்கத்தில் வந்தே வெற்றி, தோல்வியை சந்திப்பார்கள். கருத்துக்கணிப்புகளிலும் இந்தத் தொகுதி இழுப்பறி நிலையிலேயே இருக்கும் எனக் கூறப்பட்டது. இதனால், இந்தத் தொகுதியின் முடிவுகளை காண அனைவரும் ஆர்வமுடன் இருக்கின்றனர்.