தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கமும் போட்டியிட உள்ளனர்.


இந்த நிலையில், அவர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு ஆட்டோ சின்னம் என்று தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், ஆட்டோ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தால்தான் அந்த சின்னத்தை ஒதுக்கீடு செய்ய முடியும் என்றும், அதனால் தற்போது ஆட்டோ சின்னத்தை விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஒதுக்கீடு செய்ய முடியாது என்றும் மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




முன்னதாக, இன்று காலை சென்னை, பனையூரில் உள்ள தனது வீட்டில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் ஏராளமான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் நடிகர் விஜய் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பிரச்சாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.


கடந்தாண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலே நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏராளமான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட இருப்பது அவர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.






நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதில் கடந்த சில ஆண்டுகளாகவே மிகுந்த ஆர்வமாக உள்ளார். அவரது ரசிகர்களும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடாக அவரது மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது கருதப்படுகிறது.


உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் பிப்ரவரி 4-ந் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுக்களைத் திரும்ப பெற கடைசி நாள் வரும் பிப்ரவரி 7-ந் தேதி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண