ரூ 4,847 கோடி சொத்து மதிப்புடன் நாட்டிலேயே பணக்கார கட்சியாக பாஜக உள்ளதாக ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள ஏழு தேசிய கட்சிகள் அறிவித்த மொத்த சொத்து மதிப்பு ₹6,988.57 கோடியில், பாஜகவின் சொத்து மட்டும் ₹4,847.78 கோடி என்று அறிவித்துள்ளது. அதாவது ஒட்டுமொத்த தேசிய கட்சிகள் சொத்துமதிப்பில் 69.37% பாஜகவுடையது என அறிவித்தது. ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆண்டுதோறும் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பெற்ற நன்கொடை, அவற்றின் சொத்து உள்ளிட்ட தகவல்களை வெளியிடும். அதன்படி இந்த ஏடிஆர் அமைப்பு 2019-20ஆம் நிதியாண்டிற்கான தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளின் சொத்துக்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.



பா.ஜ.க.வைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி (₹698.33 கோடி), காங்கிரஸ் (₹588.16 கோடி), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (₹569.519 கோடி), அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (₹247.78 கோடி), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (₹29.78 கோடி) மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (₹8.20 கோடி) என்ற முறைப்படி பட்டியலிடப்பட்டுள்ளது. தேசிய கட்சிகளின் மொத்த கடன்கள் ₹74.27 கோடி என்றும், அதில் காங்கிரஸின் கணக்கு ₹49.55 கோடி என்றும் அறிவித்துள்ளன. ஏழு கட்சிகளின் மொத்த சொத்துக்களில் BJPயின் பங்கு 2018-2019 இல் 54.29% ஆக இருந்தது. அதிலிருந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி ஒரே வருடத்தில் 15.08% உயர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பான தேர்தல் 2013-2014 ஆம் ஆண்டிற்கான சொத்து மதிப்பில் பாஜகவும் காங்கிரஸும் கிட்டத்தட்ட ஒரே அளவான சொத்துக்கள் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது பாஜக சொத்து மதிப்பு, ரூ. 780.754 கோடியாகவும், காங்கிரஸ் சொத்து மதிப்பு, ரூ.767.23 கோடியாகவும் இருந்தன. இதில் பாஜகவின் சொத்து மதிப்பு மட்டும் ஆறு மடங்கு உயர்ந்துள்ளது. காங்கிரஸின் சொத்து மதிப்பு ரூ. 179.07 கோடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



அதேபோல பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்தும் தனி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 44 பிராந்திய கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2,129.38 கோடியாக உள்ளது. குறிப்பாக இதில் டாப் 10 இடங்களில் உள்ள பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பு ரூ 2028.715 கோடியாக உள்ளது. இது ஒட்டுமொத்த பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பில் 95.27%ஆகும். அதில் சமாஜ்வாதி கட்சி ₹563.47 கோடியுடன் முதலிடத்திலும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ₹301.47 கோடியும், அதிமுக ₹267.61 கோடியும் சொத்துக்களுடன் இருப்பதாகவும் அறிக்கை கூறியுள்ளது. முதல் 10 இடங்களில் உள்ள, சிவசேனா ₹185.90 கோடி சொத்துக்களையும், திமுக ₹184.24 கோடி சொத்துகளையும், ஜனதா தளம் (யுனைடெட்) ₹45.094 கோடியும் சொத்து மதிப்புள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த சொத்துகளில் எஃப்டிஆர் எனப்படும் நிலையான வைப்புத்தொகை மூலமே அரசியல் கட்சிகளுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது.


அரசியல் கட்சிகளின் நிதியில் மொத்தம் ரூ.1,639.51 கோடி இப்படி வைப்புத்தொகையாக உள்ளது. அதில் பாஜகவுக்கு ரூ.3,253.00 கோடியும், பகுஜன் சமாஜுக்கு ரூ.618.86 கோடியும், காங்கிரஸ் ரூ.240.90 வைப்பு தொகையாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியக் கட்சிகளில், சமாஜ்வாடி ரூ. 434.219 கோடி, டிஆர்எஸ் ரூ. 256.01 கோடி, அதிமுக ரூ. 246.90 கோடி, திமுக ரூ. 162.425 கோடி, சிவசேனா ரூ. 148.46 கோடி, பிஜு ஜனதா தளம் ரூ. 118.425 கோடி ஆகியவை வைப்பு நிதி மூலம் தங்கள் சொத்துகளைப் பெற்றுள்ளன. 2019-20 நிதியாண்டில் ஏழு தேசிய மற்றும் 44 பிராந்தியக் கட்சிகள் ரூ.134.93 கோடி கடன் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. 2021 இல் ADR இன் பகுப்பாய்வின்படி, காங்கிரஸ் அதிக கடன் கொண்ட கட்சியாக உள்ளது. காங்கிரஸிற்கு ரூ. 49 கோடி கடனும் திரிணாமுல் காங்கிரஸிற்கு ரூ. 11 கோடி கடனும், பாஜகவுக்கு ரூ. 8 கோடி கடனும் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல பிராந்திய கட்சிகளில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ரூ. 30 கோடி மற்றும் திமுகவுக்கு ரூ. 8 கோடி கடன் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளன.