தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்தாண்டு இறுதியில் காலமானார். அவர் காலமானாதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானாதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. 

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி:


ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல்? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்திலும், மக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நாட்டின் தலைமையாக செயல்படும்  டெல்லிக்கு இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 


அங்கு பதவியில் உள்ள ஆம் ஆத்மி அரசின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 23ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனால், விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகியுள்ளன. 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எப்போது?


இன்று மதியம் 2 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதனுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ஈரோடு கிழக்குத் தொகுதி மட்டுமின்றி நாட்டில் காலியாக உள்ள பிற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்ட்மன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் உயிரிழந்த நிலையில் நடந்த இடைத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியவர் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன். இந்த சூழலில், அவரும் கடந்தாண்டு இறுதியில் உடல்நலக்குறைவால் காலமானார். 

சூடுபிடிக்கும் அரசியல் களம்:


இந்த நிலையில், இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க. போட்டியிடுமா? கூட்டணிக்கட்சியான காங்கிரசுக்கே அந்த தொகுதி மீண்டும் ஒதுக்கப்படுமா? எதிர்க்கட்சிகள் போட்டியிடுமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் இடைத்தேர்தலுக்கான பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் முழுமூச்சில் இறங்க உள்ளன.

அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ளதால் தமிழக அரசியல் களம் இந்தாண்டு முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.