அன்புமணி தான் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் என ராமதாஸ்-க்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இதனால் ராமதாஸ் தரப்பு அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Continues below advertisement


ராமதாஸ் , அன்புமணி மோதல்:


கடந்த 2023ம் ஆண்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டதில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


காலப்போக்கில் பாமக-வில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலால் கட்சிக்குள் 2 அணியாக  செயல்பட்டு வந்தனர். இந்தநிலையில் அன்புமணியிடம் இருந்து தலைவர் பதவியை பறிப்பதாக அறிவித்த ராமதாஸ் அவரை கட்சியில் இருந்தும் நீக்குவதாக தன்னிச்சையாக அறிவித்தார். ஆனால் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்கு தான் அதிகாரம் இருப்பதாகவும், தலைவராக தொடர்வதாகவும் பதிலடி கொடுத்தார் அன்புமணி. 


கடந்த ஆகஸ்ட் 9 தேதி அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழுவில் அன்புமணியே 2026 ஆகஸ்ட் வரை தலைவராக தொடர்வார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதெல்லாம் செல்லுபடியாகாது என ராமதாஸ் தரப்பினர் போர்க்கொடி தூக்கி வந்த நிலையில், அன்புமணி தலைமையிலான பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதன்மூலம் அன்புமணி தலைவராக தொடர்வது உறுதி செய்யப்பட்டது. மேலும் மாம்பழ சின்னம் அன்புமணி தரப்புக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.


பாமக தலைவர் அன்புமணி


இதனை தொடர்ந்து ராமதாஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திற்கு சென்றனர். ராமதாஸ் மட்டும் தான் தலைவர், மாம்பழ சின்னம் ராமதாஸ் தரப்புக்கு தான் சொந்தம் என ஜிகே மணி டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். ஆனால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என தேர்தல் ஆணையம் உறுதியாக சொல்லிவிட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ராமதாஸ் தரப்புக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது.


அதில்,  வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். அது தொடர்பான தரவுகள் எங்களிடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் கட்சித் தலைவர் பதவி குறித்த தங்களது முரண்பாடுகளை தீர்க்க நீதிமன்றத்தை அணுக ராமதாஸுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக  அன்புமணி தரப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.