Election Commission Vote Theft: காங்கிரஸின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் விளக்கம்:

பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார், “பீகாரில் ஏழு கோடி வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்துடன் நிற்கும்போது, தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை அல்லது வாக்காளர்களின் நம்பகத்தன்மை குறித்து எந்த கேள்விக்குறியும் எழுப்ப முடியாது. சட்டத்தின்படி, வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள் சரியான நேரத்தில் பகிரப்படாவிட்டால், அல்லது தேர்தல் நடந்த 45 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யாவிட்டால், பவாக்கு திருட்டு போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது இந்திய அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும்.

தாய்மார்களின் வீடியோக்கள் வேண்டுமா?

வாக்காளர்களின் புகைப்படங்கள் அனுமதியின்றி ஊடகங்கள் முன் எவ்வாறு வழங்கப்பட்டன? வாக்காளர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்பதை சமீபத்தில் பார்த்தோம். நமது தாய்மார்கள், மகள்கள் மற்றும் மருமகள்களின் சிசிடிவி வீடியோக்களை தேர்தல் ஆணையம் பகிர வேண்டுமா? வாக்காளர் பட்டியலில் வாக்களிக்க உரிமை உள்ளவர்கள் மட்டுமே உள்ளனர், ஒரு கோடிக்கும் மேற்பட்ட அதிகாரிகள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பூத்-லெவல் முகவர்கள் மற்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கொண்ட வெளிப்படையான செயல்பாட்டில், எந்த வாக்காளரும் உண்மையில் வாக்குகளைத் திருட முடியுமா?

”தேர்தல் ஆணையத்தின் தோள்களில் துப்பாக்கி”

தேர்தல் ஆணையத்தின் தோளில் துப்பாக்கியை வைத்து இந்திய வாக்காளர்களை குறிவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போதும் அது எப்போதும் நிலைத்து நிற்கிறது. ஏழை அல்லது பணக்காரர், முதியவர்கள், பெண்கள் அல்லது இளைஞர்கள் என அனைத்து வாக்காளர்களுடனும் எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரு பாறையைப் போல நிற்கும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்திய அரசியலமைப்பின் படி, 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்காளராக மாற வேண்டும், வாக்களிக்கவும் வேண்டும். சட்டத்தின்படி, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் மூலம் பிறக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பிறகு எப்படி தேர்தல் ஆணையம் ஒரே அரசியல் கட்சிகளிடையே பாகுபாடு காட்ட முடியும்? தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, அனைவரும் சமம். யார் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு கடமையிலிருந்து பின்வாங்காது" என்று ஞானேஷ் குமார் விளக்கமளித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் மீது விமர்சனம்:

வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை, காங்கிரஸ் மட்டுமின்றி பல்வேறு எதிர்க்கட்சியினரும் நெட்டிசன்களும் கூட விமர்சித்து வருகின்றனர். அதன்படி, “வழக்கமாக மத்திய அரசை நோக்கி கேள்வி கேட்கும்போது தான், நாட்டின் தாய்மார்கள், எல்லையில் ராணுவ வீரர்கள் என பாஜ்காவினர் பதிலளிப்பார்கள். தற்போது அதே பாணியில் தேர்தல் ஆணையம் பதில்களை அளிக்கிறது” என சாடுகின்றனர். தேர்தல் ஆணையமும், பாஜகவும் தான் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார், ஆனால் வாக்காளர்கள் மோசடி செய்ததாக அவர் பேசியதாக தேர்தல் ஆணையம் திரித்து பேசுவதாக காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். ராகுல் காந்தி ஆதாரங்களுடன் அடுக்கடுக்கான கேள்விகளை வெளியிட்டதாகவும், அவை எதற்குமே விளக்கம் அளிக்காமல் பொத்தாம் பொதுவாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளதாகவும் சாடி வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி?

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் கடும் கண்டனங்கள் தெரிவித்த தேர்தல் ஆணையம், வயநாடு உட்பட எதிர்க்கட்சிகள் வென்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் அனுரக் தாக்கூர் பேசியபோது அவரிடம் ஆணையம் ஆதாரமோ, கையெழுத்தோ கேட்கவில்லை, பொய்யை பரப்புகிறார் என்று விளக்கவில்லையே ஏன்? என நெட்டிசன்கள் வினவி வருகின்றனர்.

கூடுதலாக டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தர மறுத்ததால் முறைகேடுகளை கண்டுபிடிக்க ராகுலுக்கு 6 மாத ஆய்வு தேவைப்பட்டது, ஆனால் அனுராக் அவர் குற்றச்சாட்டு வைத்த ஒரு சில நாட்களில் பல தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் தவறுகள் இருப்பதாக தரவுகளை காட்டியது எப்படி? அப்படியானால், அனுராக் தாக்கூருக்கும் மட்டும் டிஜிட்டல் தரவை தேர்தல் ஆணையம் கொடுக்கிறதா? எனவும் நெட்டிசன்கள் கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.