"தமிழக வெற்றி கழக கூட்டணியில் இணைய, ஓ.பி.எஸ்., தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது"
தமிழக சட்டமன்றத் தேர்தல்
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் இறங்கி உள்ளன. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தவெக தலைமையில் கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பி.எஸ்., அதிமுகவிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். அதிமுகவிலிருந்து ஓ.பி.எஸ்., நீக்கப்பட்டார். இதனால் அதிமுகவின் மீட்டெடுக்க வேண்டுமென ஓ.பி.எஸ்., அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு மூலமாக, தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு அமைப்பின் மூலம் மாவட்ட நிர்வாகிகளை நியமித்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, பாஜகவின் கூட்டணியில் ஓ.பி.எஸ்., அணி போட்டியிட்டது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைந்த பிறகு, அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைப்பில் மறுத்துவிட்டதால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஓ.பி.எஸ்., வெளியேறினார்.
ஆதரவாளர்களுடன் ஆலோசனை
நேற்று முன்தினம் இரவு பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் மற்றும் தனது அமைப்பின் மாவட்ட செயலாளர்னுடன் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார். அப்போது நிர்வாகிகளிடம் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். அவர்களிடம் படிவம் கொடுக்கப்பட்டு தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்கலாமா அல்லது திமுகவுடன் கூட்டணி வைக்கலாமா என்ற கேள்வி இடம்பெற்று இருந்தது. இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பி.எஸ்., இடம்பெறப் போவதில்லை என்ற முடிவை கட்சியினர் எடுத்திருந்தனர்.
அதற்கு 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என தெரிவித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து தேர்தலை சந்தித்தால்தான், எடப்பாடி பழனிச்சாமி தோற்கடித்து அதிமுகவை கைப்பற்ற முடியும் என தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தையை தொடங்கிய ஓ.பி.எஸ்.,
இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் பேசியபோது கூறியதாவது: அதிமுகவில் இணைய வேண்டும் என்பதை பன்னீர்செல்வம் விருப்பமாக இருந்து வந்தது. தனக்கு எம்.எல்.ஏ., சீட் இல்லை என்றாலும், தன்னிடம் இருக்கும் ஒரு சிலருக்கு எம்.எல்.ஏ., சீட் கொடுத்தால் போதும் என்ற நிபந்தனை அடிப்படையில் அதிமுகவில் இணைய தயாராக இருந்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட முடியாத சூழலும் உருவாகிவிட்டது.
எனவே தமிழக வெற்றி கிடைக்க கூட்டணியில் போட்டியிட முடிவெடுத்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஒருவர் தன்னுடன் கைகோர்த்து போட்டியிடுவதை விஜயும் விரும்புகிறார். கூட்டணியில் 10 முதல் 15 தொகுதி வரை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, தமிழக வெற்றி கழகத்துடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ்., தமிழக வெற்றி கழகம் வருவதை, செங்கோட்டையனும் விரும்புகிறார். எனவே தற்போது திரை மறைவில் நடைபெற்ற வரும் பேச்சுவார்த்தை, விரைவில் அதிகாரப்பூர்வ பேச்சுவர்த்தியாக நடைபெறும் என தெரிவித்தனர்.