ஃபெஞ்சல் புயல் - பாதிக்கப்பட்ட விளைநிலங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் பாதிராபுலியூர் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டது குறித்து விவசாயிகளிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
தொடர்ந்து திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, அரசு வருவாய்த்துறை, வேளாண்துறை அதிகாரிகள் மூலமாக கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும். அதேபோல் டெல்டா மாவட்டங்களில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் சுமார் 12 லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்ய இருக்கின்றன. அவற்றில் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.
ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
அதையும் அதிகாரிகள் மூலம் கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். திண்டிவனத்தில் கிடங்கல் ஏரி நாகநாதபுரம் பகுதியில் உடைந்த பாலம் நான்காண்டுகளாக கிடப்பில் உள்ளது. ஆனால் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதாக கூறி வருகிறார். இங்கு வந்து பார்த்தால் தான் ஆட்சியின் அவலங்கள் தெரியும். சென்னை மாநகரத்தில் 7 செமீ மழை தான் பெய்தது. இது இயல்பாக பெய்யக்கூடிய மழைதான். அதனால் 5,6 மணி நேரங்களில் அது தானாகவே வடிந்துவிடும்.
ஆனால் ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் மிகப்பெரிய பில்டப்பை உருவாக்கி, ஸ்டாலின் அரசாங்கம் விரைவாக செயல்பட்டு, சாலையில் இருந்த நீரெல்லாம் வடிந்ததாக பொய்யான தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். அதுபோல எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு நான் மதிப்பளிப்பது இல்லை என ஊடகவியலாளரின் கேள்விக்கு ஸ்டாலின் பதில் கூறுகிறார். ஒரு பிரதான எதிர்க்கட்சியாக மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை உரிய நேரத்தில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். அது எங்களின் கடைமை. அதிகாரத்தில் இருக்கும் முதலமைச்சர் அதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.
ஆனால் இங்கு இருக்கும் முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை சரியான முறையில் புரிந்து கொண்டு, அதற்கு தீர்வு காண வேண்டும். அதுதான் முதலமைச்சருக்கு அடையாளம். ஆனால் அதனை இவரிடம் எதிர்பார்க்க முடியாது. 20 செ.மீ மழை பெய்தாலும் சென்னையில் ஒருசொட்டு தண்ணீர் கூட தேங்காத அளவுக்கு மழைநீர் வடிகால் பணிகள் செய்யப்பட்டுள்ளன என திமுக கூறியது.
அதிமுக ஆட்சியில் சுமார் 1240 மீ நீளமுள்ள மழைநீர் வடிகால் பணி நிறைவேற்றப்பட்டது. எஞ்சிய பணிகள் இந்த ஆட்சியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் வெள்ளக் காலங்களில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கினோம். ஒரே ஆண்டில் இரண்டு முறை நிவாரணம் வழங்கினோம்.
ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கினோம். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.17,000 நிவாரண நிதி ஒதுக்கியது. ஆனால் ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் ரூ.13,500 தான் கொடுத்தது. கடந்த 3 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் நிவாரணம் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.