தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி விவரம்:-


தர்மயுத்தம் பார்ட்- 2ஆக இந்த பிரச்னையை எடுத்துக் கொள்ளலாமா?


அப்படி எடுத்துக் கொள்ளக்கூடாது; வேறு பொருளுக்காக நாங்கள் தர்மயுத்தம் நடத்தினோம். எங்களுக்குள் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார்கள்; அது குறித்து எங்களுக்குள் கலந்து பேசி நல்ல சுமூகமான முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. 


தர்மயுத்தம் அளவுக்கு இப்பிரச்னை விரிசலை ஏற்படுத்தாது என நினைக்கிறீர்களா ?


இது அந்த அளவுக்கு விரிசலை ஏற்படுத்தாது. ஏனென்றால் எங்களுக்குள் என்ன தலைமை தேவை என்பது குறித்து என்னிடமோ, தலைமைக்கழக நிர்வாகிகளிடமோ அந்த அஜெண்டாவை வெளியில் பேசியது காரணமாக, அது பத்திரிக்கையில் பேட்டி வாயிலாக வெளிவந்துவிட்டதால் தமிழகம் முழுவதும் பல்வேறு கருத்துக்களை சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள். தொண்டர்கள் நலன் கருதியே நான் பேட்டியும் அளித்திருந்தேன். 


மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது?  


நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் அழைப்பு இல்லை என்ற முடிவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த செய்தியை மாவட்ட செயலாளர்களுக்கு தகவல் சொல்ல வேண்டும் என்றுதான் இந்த கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் சிலர் கருத்து கூற விரும்புகிறார்கள் என்று மாதவரம் மூர்த்தி பேசினார். அதில் இருந்து சிலர் ஒற்றைத் தலைமை வேண்டும் எனவும், மேலும் சிலர் இதை இப்போது செய்யவேண்டாம் எனவும் கூறிய நிலையில், எந்த முடிவும் எட்டப்படாமல் கூட்டம் முடிந்தது. 


கூட்டத்தில் பெரும்பாலனவர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என கூறியதாக ஜெயக்குமார் கூறியுள்ளாரே? 


உள்ளே நடந்த கருத்துகளை வெளியே சொல்லக்கூடாது. சொன்னால் கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளது என நாங்கள் சொல்லியும், அதை மீறி அவர் பேட்டிக் கொடுத்தார். இதனால் இந்த பிரச்னை விவாத பொருளாகி உள்ளது. 


நீங்கள் சொன்னதையும் மீறி ஏன் ஜெயக்குமார் இதை சொல்ல வேண்டும்? 


அதை அவரைத்தான் கேட்கனும்.


வேறு யாராவது சொல்ல வேண்டும் என சொல்லி இருப்பார்களோ? 


எனக்கு தெரியல; ஆனால் வெளியில் சொன்னது தவறு. 


மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூறினார்களா? அல்லது ஈபிஎஸ் தலைவராக வேண்டும் என கூறினார்களா? 


யாருடைய மனமும் நோகாதவாறு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று சொன்னார்கள். இவர்தான் ஒற்றைத் தலைமையை ஏற்ற வேண்டும் என்று சொல்லவில்லை; அக்ரி கிருஷ்ணமூர்த்தி மட்டும் எடப்பாடி பழனிசாமிதான் ஒற்றைத் தலைமையாக வேண்டும் என பேசினார். 


ஜூன் 23 திட்டமிட்டப்படி பொதுக்குழு நடக்குமா?


நடக்க வேண்டும் என்றுதான் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பி உள்ளோம்; ஆனால் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் வேண்டாம், அது பல குழப்பங்களை விளைவிக்கும். 


அதிமுகவின் சட்டவிதிகள்படி ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது சாத்தியமா? 


கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளராக அம்மா அவர்கள் இருந்தார்கள். அவர்கள் காலமானதுக்கு பின்னால் பொதுச்செயலாளர் பதவி அம்மாவுக்கு மட்டுமே உரியது. அந்த பதவிக்கு யாரும் வந்து உட்காரக்கூடிய நிலைக்கு நாம் இருக்க கூடாது என்று தலைமைக்கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். 


ஆனால் ஒற்றைத் தலைமை என சொல்கிறார்களே தவிர பொதுச்செயலாளர் என யாரும் சொல்லவில்லையே? 


நானும் ஈபிஎஸும் இணைகிறபோது இரட்டை தலைமை என சொன்னதே அவர்கள் தரப்பினர்தான். உலகத்தில் எங்குமே இப்படி இல்லையே எனக்கேட்டேன். தொண்டர்கள் மீண்டும் சேர வேண்டும் என கருத்து உருவாகிவிட்ட போது 2 நாட்கள் கழித்து திரும்பவும் 2 பேருமே கையெழுத்து போடலாம் என கூறினர். 


அதிமுகவில் வருங்காலத்தில் ஒற்றைத் தலைமை வர வாய்ப்புள்ளதா?


யூகங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. 


இணைப்பின் போது ஆட்சியை ஈபிஎஸும் கட்சியை நானும்  பார்த்துக்கொள்கிறேன் என சொன்னீர்களா?


இதை அவர்கள்தான் கூறினார்கள்., இணைப்பு பேச்சுவார்த்தையில் முதலில் கட்சியை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். ஆட்சியை ஈபிஎஸ் பார்த்துக் கொள்வார் என்றார்கள். சரி நான் 2 முறை முதலமைச்சராக இருந்தேன். தற்போது முதல்வராக அவர் உள்ளார் அவரை பதவி விலக நான் முடியாது எனக்கு துணை முதலமைச்சர் பதவி வேண்டாம் என சொன்னேன். பின்னர் பிரதமர் வலியுறுத்தியதன் பேரில் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன். 


அதிமுக ஆட்சிக்கு எதிராக நீங்கள் 11 பேர் எதிராக ஓட்டுபோட்டுள்ளீர்களே?


அப்போது சசிகலாவுடன் ஈபிஎஸ் இருந்ததால் அவருக்கு எதிராக ஓட்டுப்போட்டோம். 


இன்று சசிகலாவை கட்சியில் இணைக்கலாம் என ஓபிஎஸ் கூறுகிறாரே? 


நான் எங்கேயும் இப்படி சொல்லவில்லை; தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவெடுக்க வேண்டிய சமாச்சாரம் இது என்றுதான் பேட்டியில் சொல்லியுள்ளேன். அவர்களை சேர்க்கலாம் என கூறுவது தேசவிரோத கருத்து அல்ல?


யாரால் ஈபிஎஸ் முதலமைச்சராக்கப்பட்டார்? (ஓபிஎஸ் கேள்வி கேட்கிறார்)


(எம்.எல்.ஏக்களால் முதல்வர் ஆனதாக ஈபிஎஸ் சொல்வதாக நிருபர் பதிலளிக்கிறார்)


நியாமா? நீங்களே காட்சிகளையும் சாட்சிகளையும் பார்த்தீர்கள்; அவர் யாரால் முதலமைச்சராக ஆக்கப்பட்டார்? (மீண்டும் ஓபிஎஸ் கேள்வி)


சசிகலாவால் ஈபிஎஸ் முதல்வராக்கப்பட்டதாக நீங்கள் கூறுகிறீர்கள் (நெறியாளர் பதில்)


உலகம் சொல்லுது; மறுக்க முடியுமா இது? (ஓபிஎஸ் கேள்வி). 


நிறைய விட்டுக்கொடுத்துவிட்டதாக நினைக்கிறீர்களா? 


கட்சியின் நலன் கருதி நான் விட்டுக்கொடுத்தேன்


விட்டுக்கொடுத்திருக்க கூடாது என நீங்கள் தற்போது நினைக்கிறீர்களா? 


அது முடிந்துபோனது; கடந்த காலம் என்பது PAST IS PAST....