தமிழக அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வு கண்டிக்கத்தக்கது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் கோடைகாலத்தில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தலைவாசல், ஆத்தூர் மற்றும் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்களையும் அவர் வழங்கினார்.
இதனை தொடர்ந்து தலைவாசலில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், நகர்ப்புற தேர்தல் முடிந்த உடன் திட்டமிட்டு சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தி உள்ளனர். சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது வாக்களித்த மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு என்று கூறினார். கொரோனா பாதிப்பு காலத்தில் இந்த அளவிற்கு வரி உயர்வு கண்டிக்கத்தக்கது. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது சொத்து வரியா, மக்களின் சொத்துகளை பறிக்கும் வரியா என பேசினார். தற்போது இது அவருக்கு பொருத்தமாக இருக்கும்.
தமிழகத்தில் போதை பொருட்கள் சர்வசாதாரணமாக இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைக்கிறது. அவர்களின் எதிர்காலம் பாழாகும் என பெற்றோர் அஞ்சுகின்றனர். திமுக ஆட்சியில் கடந்த 2 மாதமாக கூட்டு பாலியல் பலாத்காரம், சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். இது ஆபத்தானது. திமுக அரசு திறமையான அரசு இல்லை என்பதை உணர்த்துகிறது. பிரதமரை இழிவுபடுத்தும் அளவுக்கு அரசியல் நாகரீகம் தெரியாதவர் ஸ்டாலின். கோ பேக் மோடி என்று முழக்கமிட்ட நிலையில் தற்போது இரண்டு முறை பிரதமரை சந்தித்து வந்துள்ளார் என்று கூறினார். மத்தியில் நல்ல வரவேற்பு தந்ததாக கூறுபவர்கள் எதற்கு மத்திய அரசை வசைபாடவேண்டும். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் ஏராளமான திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரமுடியும். அப்படிதான் அதிமுக ஆட்சியில் திட்டங்கள் தந்தோம். அதிமுகவை மத்திய அரசுக்கு காவடி தூக்குவதாக பேசியவர்கள் இப்போது என்ன தூக்கி செல்கின்றனர் என மக்கள் கேட்கின்றனர்.
நான் முதல்வராக இருந்தபோது எனது குடும்பத்தினரை வெளிநாட்டிற்கு அழைத்து சென்றதாக கூறிய நெறியாளர் மீது வழக்கு தொடுப்போம். திமுக ஆட்சியில் நில அபகரிப்பு வந்துவிடும். இதனை தடுக்க அதிமுக ஆட்சியில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு கொண்டுவரப்பட்டது. தற்போது மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சியில் உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் மீது நில அபகரிப்பு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.