சேலம் மாவட்டம் ஓமலூர் கட்சி அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாநகர நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். 



சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமையேற்ற இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நவம்பர் 1 ஆம் தேதி திருத்திய வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. ஆதலால் நாம் தேர்தலுக்கு தயாராக வேண்டும், வாக்காளர் பட்டியலை முழுமையாக ஆய்வு செய்து விடுபட்டவர்களை சேர்க்கவும், இறந்தவர்களை நீக்க பகுதி கழக நிர்வாகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் எனவும் கட்சி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார். அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த திடீர் நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தொண்டர்கள் மத்தியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.



பின்னர், காஞ்சிபுரம் சங்கரமடம் சார்பில் ராமர் பாதம் மற்றும் 16 புண்ணிய நதிகளின் தீர்த்தம் அடங்கிய வேன் ஒன்று தயார் செய்யப்பட்டு ஒவ்வொரு ஊராக ராமர் பாதம் எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் வீடுகளை வைத்து பூஜை செய்யப்படுகிறது. இந்த வேன் தற்போது ஒவ்வொரு ஊருக்கும் ராமர் பாதம் எடுத்து சென்று மக்களின் வீடுகளில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. சுமார் ஒரு கோடி வீடுகளில் ராமர் பாதம் வைத்த பின்னர் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் ராமர் பாதம் மற்றும் புனித தீர்த்தத்தை வழங்க ஏற்பாடுகளை செய்து உள்ளனர். அதன் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த வேன் பயணம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடப்பதை அறிந்த இந்த வேன் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வந்தது. இதனையறிந்த எடப்பாடி பழனிச்சாமி ராமர் பாதத்தையும் புனித தீர்த்தத்தையும் தொட்டு வணங்கினார். அதிமுக கூட்ட நிகழ்ச்சி வந்திருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் ராமர் பாதத்தை தொட்டு வணங்கினர். இதன் பிறகு  ராமர் பாதம் வேன் ஓமலூர் அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்றது.


இந்த கூட்டத்தில், கழக அமைப்பு செயலாளர் செம்மலை, மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், மாநகர அவை தலைவர் பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே. செல்வராஜ், சக்திவேல், பகுதி கழக நிர்வாகிகள், டிவிசன் செயலாளர்கள் பங்கேற்றனர்.