செப்டம்பர் 18ஆம் தேதி முதல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நெருங்கி வரும் நிலையில்,  அனைவரும் ஒன்றிணைந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது என திமுக எம்.பிகளுக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  நம்து நோக்கம் தெளிவாக உள்ளது. "பாஜகவின் திசை திருப்பும் தந்திரங்களுக்கு மயங்க வேண்டாம். வலுவாக நிற்கவும் குரல் எழுப்பவும், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்தியா கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சி எம்.பிகளுடன் நாம் ஒன்று சேர்ந்து, பாஜகவின் சதிகளை முறியடித்து, நமது மாபெரும் குடியரசு நாட்டின் நீதியை உறுதி செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் திமுக அதன் கூட்டணிக்கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 


மதுரை எய்ம்ஸ் - காவிரி நீர் பங்கீடு - இந்தியா கூட்டணி 


அந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் குறித்தும் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ”உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய காவிரி நீரை உடனடியாக விடுவிக்குமாறு கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்திட வேண்டும் எனக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை முடக்கி வைத்திருப்பது போல் - இரண்டாவது கட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிக்கான நிதிஒதுக்கீட்டையும் ஒன்றிய அரசு செய்யவில்லை. தமிழ்நாட்டு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தடைக்கல்லை ஏற்படுத்தி வருகிறது.


நீட் தேர்வு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதலை அளித்திட தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தி.மு.க., குரல் எழுப்பும்.


நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 விழுக்காடு மகளிருக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலுவாகக் குரல் எழுப்ப இக்கூட்டம் முடிவு செய்துள்ளது.


மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி ஒன்றிய அரசின் துறைகளில் முழு ஒதுக்கீடு, அரசு துறைகளில் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு, தனியார் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள க்ரீமிலேயரை 25 லட்சமாக உயர்த்த வேண்டும், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் ஆகிய கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் தி.மு.க., வலியுறுத்தும். 


இடஒதுக்கீட்டிற்கு உள்ள 50 விழுக்காடு உச்சவரம்பு நீக்கப்படுவதற்கான மசோதாவை இந்தச் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்திலேயே நிறைவேற்ற வலியுறுத்துவோம்.


ஒன்றிய பா.ஜ.க. அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 'விஸ்வகர்மா யோஜனா' என்ற குலத் தொழிலை ஊக்குவிக்கும் சூழ்ச்சியான திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கழக உறுப்பினர்கள் குரலெழுப்புவார்கள்.


எங்கள் ஆட்சிக் காலத்தில் நாட்டையே மாற்றுவோம் என பேசி வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசு, தற்போது 'இந்தியா' கூட்டணிக்கு அஞ்சி ‘பாரத்’ என்று நாட்டின் பெயர் மாற்றுவதிலேயே உன்னிப்பாக இருக்கிறது.


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் - முற்றிலும் தோல்வியுற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசை, நாடாளுமன்றத்தில் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து எதிர்கொண்டு இந்திய ஜனநாயகத்தைக் காத்திட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து இந்திய ஜனநாயகத்தை காத்திட’ இக்கூட்டம் தீர்மானிக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.