“பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.” தமிழ்நாடு முதலமைச்சரின் பேட்டி தான் தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த கோபமான வார்த்தைகள் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.


ராமதாஸ் அறிக்கை என்ன ?


"இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மின்சார வாரியங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2100 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதை மறைத்து, அமெரிக்காவில் முதலீடு திரட்டியது தொடர்பாக அதானி குழும நிறுவனங்கள் மீதும், அவற்றின் தலைவர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கில் அதானியை கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது."


Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரிகளுக்கு எவ்வளவு கையூட்டு கொடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் அதில் இடம் பெறவில்லை என்றாலும் கூட கையூட்டு பெற்றதில் தொடர்புடைய நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, கையூட்டு வழங்கப் பட்டதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால கட்டத்தில் தான், அதாவது 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் அதானி குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்கான ஒப்பந்ததில் தமிழ்நாடு மின்சார வாரியமும், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகமும் கையெழுத்திட்டுள்ளன என பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. 


இட ஒதுக்கீடு போராளிகள் மணிமண்டபம்


விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர் சங்கம் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டத்தின்போது, காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபம் வருகின்ற முதல்வர் ஸ்டாலின் 29 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்கு அழைப்பு அனுப்பப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்து இருந்தார். 


பாமக பலமுறை 10.5 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என முதல்வரிடம் பல வகையில் கோரிக்கை வைத்தும், கண்டுகொள்ளாமல் இருந்து வருவதாக பாமக தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. இட ஒதுக்கீடு பற்றி பேசாமல் மணிமண்டபத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்ததால் ராமதாஸ் அப்செட் ஆகி விட்டாராம். 


முதலமைச்சரின் கோபம் ஏன் ?


இட ஒதுக்கீடு கொடுக்காமல் போராளிகளுக்கு மணி மண்டபம் திறப்பு விழாவில் கலந்து கொள்வது என்பது, தியாகிகளுக்கு செய்யும் துரோகம் என ராமதாஸ் கருதியுள்ளார். மணி மண்டபத்தை மையமாக வைத்து, நீண்டகால அரசியலுக்கு திமுக பல்வேறு திட்டங்களையும் வைத்துள்ளதாம், இதனை அறிந்த ராமதாஸ் முதலில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான பதில் கொடுங்கள் என முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார். தொடர்ந்து அதானியை பற்றி அறிக்கை வந்ததால் தங்கள் மீது முதல்வருக்கு கோபம் அதிகரித்ததாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வரின் பேட்டிக்கு பாமக பல்வேறு இடங்களில் போராட்டத்தையும் தொடங்கி உள்ளது. தற்போது அரசியல் களத்தில் அதிமுக சைலன்ட் மோடில் இருக்கும்போது, திமுகவை எதிர்த்து பாமக அரசியல் செய்து வருவது, தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.